பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான வழக்கு போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி சமீர் வான்கடேவிடமிருந்து பறிக்கப்பட்டு சஞ்சய் குமார் என்பவரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


வழக்கு கடந்து வந்த பாதை:


கடந்த மாதம் 2ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்யான் கானிற்கு கடந்த 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.




இந்நிலையில் தற்போது அந்த வழக்கு போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அதிகாரிகளிடம் இருந்து மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிகின் மகன் தொடர்பான வழக்கு உட்பட் 6 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மத்திய பிரிவு விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் சில மத்திய பிரிவுகளின் உதவி தேவைப்படுவது ஆகியவை திடீர் மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆர்யான் கான் வழக்கை விசாரிக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி சமீர் வான்கடே மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாக இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.


யார் இந்த சஞ்சய் குமார்?


சஞ்சய் குமார் சிங், 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். ஒடிசா மாநிலத்திலிருந்து அவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒடிசா காவல்துறையில் கூடுதல் ஆணையராகவும், ஐஜியாகவும் இருந்திருக்கிறார்.
போதை பொருள் தடுப்பு பிரிவில் இணையும் முன்னர் இவர் ஒடிசா மாநிலத்தில் ட்ரக் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற பிரிவின ஏடிஜிபியாக இருந்தார். அவரது பணிக்காலத்தில் புவனேஸ்வரில் பல்வேறு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை சிபிஐயில் பணியாற்றினார்.


2021 ஜனவரியில் அவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் டிடிஜியாக இணைந்தார். இந்நிலையில் இவரிடன் ஆர்யன் கான் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்ட்டுள்ளது. டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு படை சில காலம் மும்பையில் தங்கியிருந்து சஞ்சய் குமாருக்கு உதவியாக விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் சமீர் வான்கடேவிடமிருந்து வழக்குகளை விடுவித்தாலும் கூட அவர் தொடர்ந்து பிராந்திய இயக்குநராகவே செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.