தெருவில் நின்று ஒரு சுற்று திரும்பிப் பார்த்தால் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. அதீத மொபைல் உபயோகம், கட்டுப்பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பலவகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனில், குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். அப்படி மொபைல் போனுக்கு அடிமையாகி வீட்டை விட்டு சென்ற சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் வசிக்கும் 13 வயது சிறுவன், சமூக வலைதளத்தில் உள்ள ஒரு மெசேஜிங் மொபைல் ஃபோன் செயலிக்கு அடிமையாகி, தனது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, புதன்கிழமை தனது பெற்றோருடன் சிறுவன் மீண்டும் சேர்ந்தான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



பத்லாபூர் கிழக்கு காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் சந்தேஷ் மோர் கூறுகையில், "அக்டோபர் 31-ஆம் தேதி சிறுவன் தனது பெற்றோர் இடம் இருந்து ஒரு வருடத்திற்கு தள்ளி இருப்பதாகத் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளான்." என்றார். இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. “போலிசார் அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, ​​சிறுவன் மற்ற குழந்தைகளுடன் டிஸ்கார்ட் என்னும் மொபைல் செயலியில் தொடர்பு கொண்டதும், குழுவில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதும் தெரிய வந்தது. அந்த மெசேஜின் செயலியில் இருந்த குழுவின் உறுப்பினர்கள் தங்களை நிரூபிப்பதற்காக வாழ்க்கையில் ஏதாவது செய்ய தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவரது நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்," என்று மோர் மேலும் கூறினார். அதன்படி, தானே காவல்துறையின் சைபர் செல் போலீசார், சிறுவன் பயன்படுத்திய மொபைல் போனின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து, அதன் மூலம் அவர் கோவாவில் இருப்பதாக கண்டுபிடித்து கூறியது. அதன்படி கோலாப்பூர் வழியாக பக்கத்து மாநிலத்திற்குச் சென்றுகொண்டிருந்த சிறுவனை போலீசார் கோவாவில் உள்ள கலங்குடேவில் கண்டுபிடித்து, அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைத்தனர்.



குடும்பத்துடன் இணைத்த சிறுவனுக்கு மனநல மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து செல்லுமாறு போலீசார் அறிவுருத்தி அனுப்பி வைத்தனர். டிஸ்கார்ட் என்னும் செயலி வாட்ஸ்அப் போலவே நமக்கு தெரிந்தவர்களுக்கு மெசேஜ் செய்யும் ஒரு செயலி ஆகும். அந்த செயலியில் மெசேஜ் சாட் மட்டுமின்றி கேமிங் அம்சமும் கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. அத்துடன் கேமும் விளையாட முடியயும். இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.