இந்தியாவின் டாப்-10 நன்கொடையாளர்கள் பட்டியலை ஹுரூன் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ரூபாய் 50 கோடி நன்கொடை அளித்ததன் மூலம் ’EdelGive Hurun’ இந்தியா தொண்டு நிறுவனங்களின் பட்டியல் 2021ல் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இன்டாஸ் பார்மாசூட்டிகல்ஸின் ஹஷ்முக் சுட்கர் மற்றும் FMCG துறையின் ராஜீவ் குமார் மற்றும் ரவீந்தர் குமார் ஆகியோர் உள்ளனர். நடிகர் அக்‌ஷய் குமார் ரூபாய் 26 கோடி நன்கொடை அளித்ததன் மூலம் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து ஜெரோதாவின் நிதின் மற்றும் நிகில் காமத், சன் பார்மாவின் திலீப் ஷாங்வி தற்போது பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். 






முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலவும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அடுத்த சில நாட்களிலே ஆகாசா விமான நிறுவனத்துக்கான தடையில்லாத  சான்றிதழை மத்திய அரசு வழங்கியது. இதனால் ஆகாசா விமானம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். ஆகாசா குறித்தும் நாமும் தெரிந்துகொள்வோம்.







இந்தியாவின் வாரன் பபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  தொடங்கிய எஸ்என்வி ஏவியேஷன் நிறுவனத்தின் பிராண்ட் பெயர்தான் ஆகாசா. இதில் ராகேஷ் ரூ247.5 கோடியை முதலீடு செய்து 40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே இணை நிறுவனராக இருக்கிறார். மேலும் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா கோஷும் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். இது தவிர ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, கோ ஏர் (கோ பர்ஸ்ட்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய பல முக்கிய அதிகாரிகள் இதில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சிலரும் முதலீடு செய்திருக்கின்றனர் அதனால் இந்த விமான நிறுவனம் மீது எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றன.