பாலிவுட் உலகின் பாதுஷா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாரூக்கான். இவரது மூத்தமகன் ஆர்யன்கான். இவரை கடந்த 3-ந் தேதி சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக மும்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆர்யன்கானுக்கு 25 நாட்களுக்கு பிறகு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், தமாஷா ஆகிய மூவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதி நிதின்சாம்ப்ரே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ஆஜராகி வாதாடினர்.




அவர் தனது வாதத்தில், “ஆர்யன்கானிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் போதைப்பொருள் உட்கொண்டார் என்பதை நிரூபிக்க எந்தவித மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. விதிகளை மீறி ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றார்.


அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் அமித்தேசாய், “ போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிரிமினல் சட்டப்படி 41-ஏ யின் விதிகளை மீறி சட்டவிரோதமாக கைது செய்திருக்கின்றனர். வாட்ஸ்-அப் உரையாடல்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை முந்தைய தீர்ப்புகளில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.” இவ்வாறு அவர் வாதிட்டார். அதேசமயம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் புதியதாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் கிடையாது என்றும், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்றும் வாதிட்டார்.




இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிதின், ஆர்யன் உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விரிவான தீர்ப்பு விவரம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படம் என்றும் அறிவித்தார். இதனால், ஜாமீன் பெற்றபோதும் 3 பேரும் உடனே விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் தமாஷா மூவரும் நாளை ஜாமீனில் வெளிவருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜாமீனில் வெளிவர உள்ள மூவரும் தங்களது பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணை குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கக்கூடாது என்றும், மும்பைக்கு வெளியில் செல்வதாக இருந்தால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.




மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைகக்கு ஆஜராக வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணையை தாமதப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண