16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 29ம் தேதி இத்தாலி தலைநகர் ரோம் சென்றார். பிரதமர் இந்த வருகையையொட்டி, ரோம் நகரில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இத்தாலியில் உள்ள இந்திய சமுதாயத்தின் பிரதிநிதிகள், இத்தாலிய இந்து சங்கம், கிருஷ்ண பக்த சபையின் இத்தாலிய நிர்வாகிகள், சீக்கிய சமுதாயத்தினர் மற்றும் உலகப் போர்களின் போது இத்தாலியில் பணியாற்றிய இந்திய வீரர்களின் நினைவை போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இந்தியாவின் நண்பர்களை பிரதமர் மோடி சந்தித்தாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் இந்தியவியலாளர்கள் மற்றும் சமஸ்கிருத அறிஞர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி பிரதமர் வாடிகன் நகரில் போப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசினார். இந்நிலையில், பிரதமர் வாடிகன் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனைக்கு செல்ல வாடகை டாக்சி காரைப் பயன்படுத்தியதாக சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசு முறை பயணமாக வந்த இந்திய பிரதமருக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை, பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
ஆனால், பிரதமர் பயணித்த வாக்ஸ்வாகன் கார் வேண்டுமென்றே டிஜிட்டல் போட்டோஷாப் மூலம் திருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நெட்டிசன்களில் யாரோ ஒருவர், உண்மையான புகைப்படத்தில் டாக்சி என்ற வாசகத்தை பொருத்தியுள்ளார். முதன் முதலாக, வாடிகன் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனைக்கு பிரதமர் வந்தடைந்த புகைப்பட்டத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. அந்தப் புகைப்படத்தில் டாக்ஸி என்ற வாசகம் இடம்பெறவில்லை.
பிரதமர் போப் ஆண்டவர் சந்திப்பு:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இந்தியப் பிரதமர் மற்றும் போப் ஆண்டவர் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது. கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம், மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், வாடிகன் சென்று அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பாலை சந்தித்தார். இந்தியா மற்றும் வாடிகன் இடையே, கடந்த 1948ம் ஆண்டு முதல் தூதரக உறவு நிலவுகிறது. கத்தோலிக்க மக்கள் அதிகமாக வசிக்கும் இரண்டாவது பெரிய ஆசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதன் பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பருநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது அதேபோல் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தியது போன்றவற்றில் இந்தியா மேற்கொண்ட லட்சிய நடவடிக்கைகளை போப் ஆண்டவரிடம் பிரதமர் விளக்கினார். பெருந்தொற்று நேரத்தில் தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவியை போப் ஆண்டவர் பாராட்டினார்.
சந்திப்பின் இறுதியில், போப் பிரான்ஸிஸ் இந்தியா வர, பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.