இன்று எதிர்க்கட்சிகளின் எதிப்புக்கு மத்தியில் , மக்களவையில் ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் தேர்தலை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
முதல் கட்டம்: மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துதல்
இரண்டாம் கட்டம்: நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் 100 நாட்களுக்குள் நடத்துதல்.
ஒரே நேரத்தில் ஒரே தேர்தல் வரலாறு:
இந்தியாவில் ஒரே நேரத்தில், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மற்றும் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்துவது என்பது புதிய யோசனையா என்றால், இல்லை. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 1951 முதல் 1967 வரையிலான காலகட்டம்வரை, ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டது.
அதாவது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான முதல் பொதுத் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
இரண்டாவது தேர்தல் 1957 ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
மூன்றாவது தேர்தல் 1962 ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
நான்காவது தேர்தல் 1967 ஆம் ஆண்டுல் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
சீர்குலைந்த தேர்தல் சுழற்சி:
இதையடுத்து, சிக்கல்கள் எழ ஆரபித்தன. அதாவது, 1968, 1969 ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இதனால் தேர்தல்களின் சுழற்சி சீர்குலைந்தது.
மேலும், நான்காவது மக்களவையும் 1972 ஆம் ஆண்டுவரை இருக்க வேண்டிய நிலையில், 1970-ல் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இதையடுத்து, 1971-ல் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன.
முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மக்களவையைப் போலல்லாமல், ஐந்தாவது மக்களவையின் பதவிக்காலம் 1977 வரை 352 வது பிரிவின் கீழ் அதிக நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
அதற்குப்பின், எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவை பதவிக்காலம் மட்டுமே முழு ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஆறாவது, ஏழாவது, ஒன்பதாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது.
மாநில சட்டமன்றங்களும், பல ஆண்டுகளாக முன்கூட்டியே கலைத்தல், கால நீட்டிப்பு போன்ற இடையூறுகளை எதிர்கொண்டன. இந்த நடைமுறைகள் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சுழற்சியை நிறுத்திவிட்டன.
மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் முறை:
இந்நிலையில், தேர்தல் செலவினம் குறையும், அரசு நிர்வாகத்திறன் மேம்படும் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான மத்திய அரசு , ஒரே நாடு -ஒரே தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும் என்று, இன்று அதற்கான மசோதாவையும் மக்களவையில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கூறி இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இம்மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பபடும் என்று தகவல் தெரிவிக்கின்றன. இக்குழுவில், மசோதா குறித்து விரிவான ஆலாசனை மற்றும் ஆராய்தல் மேற்கொள்ளப்படும்.