ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 


நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?


இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை அண்மையில் சமர்ப்பித்தது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளை ஏற்று கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை கோரும் 129 அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். வாக்கெடுப்பின் மூலமே மசோதா அறிமுகம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியதை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


மசோதாவை அறிமுகம் செய்ய 269 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 198 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, "129வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2024ஐ நான் எதிர்க்கிறேன்.


"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்"


எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல், இது கூட்டாட்சிக்கு எதிரானது. 5 ஆண்டுகளுக்கு அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. அதை, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் குறைக்க முடியாது. இதை கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்றார்.


பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு கேட்டிருக்கிறார். இந்த மசோதாவை கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.


இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.