இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  நேற்று மதியம் 12.30 மணிக்கு   ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். 


அயோத்தி ராமர் கோயில்:


உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர், அச்சிலையின் கண்களை முடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.  மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர். 


மேலும், கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.


பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம்?


நேற்று நடந்த விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, அயோத்தி குழந்தை ராமரை பொதுமக்கள் எப்போது தரிசனம் செய்யலாம் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.


அதன்படி, இன்று முதல் பொதுமக்கள் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்றும் காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மதியம் 2.00  மணி முதல் இரவு 7.00 மணி வரையும் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஜாகரன் / சிருங்கர் ஆரத்தி காலை 6.30 மணிக்கும், சந்தியா ஆரத்தி - இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இதற்கேற்ப உங்கள் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.


முன்பதிவு செய்வது எப்படி?


ஆரத்திக்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் மற்றும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். தரிசன செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, கோயிலில் இருக்கு முகாம் அலுவலகத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.  சரியாக அடையாள அட்டைகளை சமர்பித்து டிக்கெட்டுகளை முகாமில் பெற்றுக் கொள்ளலாம். 


ஆன்லைனில், https://srjbtkshetra.org/  என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. ஒரிரு நாட்களில் இந்த  இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும், பொதுமக்கள் நன்கொடையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே போன்ற அனைத்து யுபிஐ ஆப்ஸ் மூலமாக நன்கொடைகளை வழங்கலாம். 


பக்தர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளின் இருக்கும் QR குறியீட்டை காண்பித்த பிறகு தான் கோயிலுக்குள்  அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.