உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அயோத்தியில் கோலாகலமாக திறக்கப்பட்ட ராமர் கோயில்:
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மத ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என கூறி, ராமர் கோயில் திறப்பு விழாவை அவர் புறக்கணித்தார்.
இந்த நிலையில், ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் அனைத்து மத நம்பிக்கை பேரணியை தொடங்கியுள்ளார் மம்தா. கொல்கத்தாவில் பேரணியை தொடங்குவதற்கு முன்பு காளிகாட் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். கோயிலில் பூஜையை முடித்து கொண்டு, ஹஸ்ரா மோரில் பேரணியை தொடங்கிய மம்தா வழியில் இருந்த மசூதி, தேவாலயம் மற்றும் குருத்வாராக்களுக்கு சென்றார்.
மம்தா கையில் எடுத்த ஆயுதம்:
ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய மம்தா, "மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது” என்றார்.
மம்தா பேரணியையொட்டி கொல்கத்தா காவல்துறை உதவி ஆணையர் அளவிலான அதிகாரிகள் உட்பட 3,500 காவல்துறை அதிகாரிகள் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கூடுதல் படைகளும் தயார் நிலையில் உள்ளன.
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று அறிக்கை வெளியிட்ட மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "ஜனவரி 22, 2024 அன்று, தேசத்தின் நம்பிக்கையோடு பிணைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை தேசம் காண உள்ளது.
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மேற்கு வங்காளத்திலும் நடைபெறும். நமது தேசத்தின் சாரத்தை அதன் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் வலுவான இணைப்புகள் மூலம் மறுவரையறை செய்யும் இந்த சிறப்பான நாளில், நமது தாய்நாட்டின் பெருமையை பகிர்ந்து கொள்ள மீண்டும் உறுதி கொள்வோம்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த நிகழ்வை இனிமையாகவும் ஒளி ஏற்றி வைக்கவும் வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நண்பர்களே, அனைவரும் சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் உங்கள் பக்கம் உள்ளது. சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க மக்கள் ஒற்றுமையாக எழும் நேரம் இது" என குறிப்பிட்டிருந்தார்.