மார்ச் 1 2023 முதல் மார்ச் 31 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 47 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 


வாட்ஸ் ஆப் மாதந்திரம் வெளியிடும் தனது பயனர்களின் பாதுகாப்புக்கான ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் தகவல்தொழில்நுட்ப சட்டத்துக்கும், வாட்ஸ் ஆப் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத பயனர்களின் கணக்குகள் இவ்வாறு தடைக்கு ஆளாகி இருக்கின்றன. இது தவிர பயன்பாட்டில் இல்லாத கணக்குகளையும் வாட்ஸ் ஆப் தடை செய்துள்ளது. இந்த வகையில் மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்தில் 47,15,906 வாட்ஸ் ஆப் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.


முன்னதாக பிப்ரவரி 28 வரையிலான காலகட்டத்தில் 45,97,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தன. முன்னதாக ஜனவரியில் 2.9 மில்லியன் கணக்குகளும், டிசம்பர் 2022ல் 3.6 மில்லியன் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தன.


பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் கண்டிருக்கும் வாட்ஸ் ஆப் சேவையில், அதன் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.


வாட்ஸ் ஆப் பயனர்கள் சேவை சார்ந்தும், இதர வாட்ஸ் ஆப் பயனர்களிடம் இருந்தும் எழும் குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களை வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு முறையிட்டால், அவர்கள் அந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு வாட்ஸ் ஆப் செயலி வாயிலாகவே புகார் அளிக்கவும் முடியும். அந்த வகையிலான புகாரின் கீழும், மாதாந்திரம் கணிசமான வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 


வாட்ஸ் அப் இந்த நடவடிக்கையை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்துகிறது.