இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகள் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகிறது. நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72 சதவீத விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படுகிறது.


அது அருந்துவதால் அதிகரிக்கும் விபத்துகள்:


கடந்த 2019ஆம் ஆண்டில், எய்ம்ஸ் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுவுக்கு அடிமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. மது அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், அஸ்ஸாம் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மது பழக்கம் அதிகம் உள்ள 300 காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டு, காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


"குடிக்கிறத விடு இல்ல வேலைய விடு"


உள்துறையை கவனித்து வரும் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுமார் 300 அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குடிப்பழக்கம் உள்ளவர்கள். அதிகப்படியான மது அருந்துவது அவர்களின் உடல்களை சேதப்படுத்தியுள்ளது. அவர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அரசாங்கம் வழங்கியுள்ளது. இது பழைய விதி. ஆனால், நாங்கள் இதை முன்பு செயல்படுத்தியதில்லை.


நிர்வாகத்தை பரவலாக்க, மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளிலும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட அலுவலகங்களைத் திறப்பதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளோம்.


துணை ஆணையர் அலுவலகத்தில் வேலைக்காக மாவட்டத் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்பதையும், இந்திய சீன எல்லை பகுதியின் ஒவ்வொரு இடத்திலும் துணை ஆணையர் அலுவலகம் இருப்பதை உறுதிசெய்யவும் முயற்சிக்கிறோம். துணை ஆணையர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிப்பார்கள். மேலும் அவர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்படும்" என்றார்.


மதுபானம் அருந்துவதால் நிகழும் மரணம்:


கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அரசு ஆய்வின்படி இந்தியாவில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 14.6 சதவீதம் (16 கோடி பேர்) பேர் மது அருந்துகிறார்கள். சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் மதுபானம் அருந்துவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


உலக சுகாதார அமைப்பின் 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மதுபானம் அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,60,000 பேர் உயிரிழக்கின்றனர். ஆய்வின்படி 25 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களில் 88 சதவீதத்துக்கு அதிகமானோர் வயது வரம்பை மீறி சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்குகிறார்கள்.


இந்தியாவில் குஜராத், பிஹார், மிசோராம், நாகாலாந்து, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை உள்ளது.