காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் போட்டியில் இருந்து தான் முழுவதுமாக வெளியேறவில்லை என்பதை ராகுல் காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி இதுகுறித்து பேசுகையில், "நான் காங்கிரஸ் தலைவராக வருகிறேனோ? இல்லையோ? என்பது உள்கட்சி தேர்தல் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். எந்த வித குழப்பமும் இல்லை. யாத்திரை மூலம் என்னைப் பற்றியும் இந்த அழகான நாட்டைப் பற்றியும் ஓரளவு புரிந்துகொள்வேன். மேலும் இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அனுபவம் பெற்றவனாக மாறுவேன்" என்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும். செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
கபில் சிபல், அஸ்வனி குமார், குலாம் நபி ஆசாத் உள்பட மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், காங்கிரஸ் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காந்தி அல்லாத ஒருவர் கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த முடியுமா என்ற கேள்விக்கு மத்தியில் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
குழந்தைத்தனமாகவும் முதிர்ச்சியற்றத்தன்மையுடனும் நடந்து கொண்டதாக ராகுல் காந்தி மீது குலாம் நபி ஆசாத் விமர்சனம் மேற்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி, அனுபவம் இல்லாத போதிலும் தன்னை புகழ்ந்தவர்களை கட்சியை நடத்த அனுமதித்துள்ளார் என்றும் ராகுல் காந்தியை சாடி இருந்தார்.
2019ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றபோது, பொதுத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அதே ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் தலைவராக வருவதற்கு மறுத்துவிட்டார். செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், காலக்கெடு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற 49 சட்டப்பேரவை தேர்தலில், 39 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி பெற்றது. இச்சூழலில், கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொங்கி உள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடை பயணம், 150 நாள்களுக்கு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ நடை பயணத்தை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.