இந்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமான சேவை டாடாவிற்கு விற்கப்பட்டது. கடந்த 1932ம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடா தொடங்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டு ஏர் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் டாடா குழுமத்தின் வசம் சென்றது.


மத்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமத்தின் வசம் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற காரணத்தால், மத்திய அரசின் கட்டிடங்களில் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை காலி செய்யும் பணிகளில் டாடா குழுமம் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை காலி செய்து, டாடா குழுமத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்கு கோப்புகள் மற்றும் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர். அலுவலகத்தை மாற்றும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.




முன்னதாக. மத்திய அரசின் விமான சேவையான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஏர் இந்தியாவின் கடன் தொகை அதிகரித்து வந்த சூழலில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அதை விற்க முடிவு செய்தது. இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் 8-ந் தேதி விடப்பட்ட ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கைப்பற்றியது.


18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை கைப்பற்றிய டாடா குழுமம், ரூபாய் 2 ஆயிரத்து 700 கோடியை மத்திய அரசுக்கு செலுத்தவும், மீதத்தொகையைான 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தொகையை ஏர் இந்தியாவிற்கு உள்ள கடன் தொகையில் செலுத்தவும் டாடா குழுமம் ஒப்புக்கொண்டது. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் டாடா வசமே சென்றது நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.




1932ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் 1946ம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம்  செய்யப்பட்டது. இந்தியாவிலே முதன்முறையாக சர்வதேச விமான சேவையை தொடங்கிய விமான நிறுவனம் என்ற பெருமையும் ஏர் இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. 1948ம் ஆண்டு சர்வதேச விமான சேவையை தொடங்கிய  ஏர் இந்தியாவை 1953ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு தேசியமயமாக்கியது.


இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவையான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 1,800 இறங்குதளங்களும், 4 ஆயிரத்து 400 விமான நிறுத்துமிடங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : HDI : இலங்கை, வங்கதேசத்தை காட்டிலும் பின்தங்கியுள்ள இந்தியா.. வெளியான மனித வள குறியீடு...ஐநா அதிர்ச்சி அறிக்கை


மேலும் படிக்க : Rahul Gandhi Shirt : ஹேய்..பயமா...பிரச்னைய பேசுங்க...உடை குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவுக்கு காங்கிரஸ் நச் பதில்