ஐநா வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான மனித வள மேம்பாட்டு குறியீட்டு பட்டியலில் இந்தியா 132-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 191 நாடுகள் கொண்ட பட்டியலை வியாழக்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் வெளியிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியா ஒரு இடம் கீழே சென்றுள்ளது.


நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த மக்களிடம் திறன் உள்ளதா, கல்விக்கான வசதி உள்ளதா, வாழ்க்கை தரம் போன்ற காரணிகள் கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மனித வள குறியீடு, 2020 இல் 0.642 இல் இருந்து 2021 இல் 0.633 ஆகக் குறைந்தது. 1990ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் மனித வளக் குறியீடு ஒவ்வொரு ஆண்டும் மேம்பட்டு வந்துள்ளது. அது 2019 இல் தேக்கமடைவதற்கு முன்பு, 2020 இல், குறியீடு 0.003 புள்ளிகள் சரிந்தது. 2021 இல் 0.009 புள்ளிகள் சரிவை சந்தித்தது. குறியீட்டில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், "நடுத்தர மனித வளம்" கொண்ட நாடுகளின் பிரிவிலேயே இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பிரிவில், 43 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.


இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 73வது இடத்தையும் சீனா 79வது இடத்தையும் வங்கதேசம் 129வது இடத்தையும் பூடான் 127வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவை காட்டிலும் பட்டியலில் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் (161வது), நேபாளம் (143வது), மியான்மர் (149வது) ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. தெற்கு சூடான், சாட் மற்றும் நைஜர் ஆகிய மூன்று நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் மனித வள குறியீடு 0.009 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம், 2020 இல் 70.1 வருடங்களாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த ஆண்டு 67.2 ஆகக் குறைந்துள்ளது.


இந்தியாவின் மொத்த தனிநபர் வருமானம் 2020 இல் டாலர்கள் 6,107 (ரூ. 4,86,689) இல் இருந்து 2021 இல் 6,590 டாலர்களாக (ரூ. 5,25, 181) உயர்ந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மன உளைச்சலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாலின வளர்ச்சியைப் பொறுத்தவரை, இந்தியாவின் குறியீட்டு எண் 2021 இல் 0.849 ஆக உயர்ந்தது, அதற்கு முந்தைய ஆண்டு 0.845 ஆக இருந்தது. 0.105 இலிருந்து 0.101 வரையிலான பாலின இடைவெளியில் சிறிது வீழ்ச்சியே இந்த உயர்வுக்குக் காரணம். இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த சட்ட உரிமைகள், அரசியலில் அதிக பிரதிநிதித்துவம், ஊதியம் மற்றும் ஊதியம் இல்லாத வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு சிறந்த ஆதரவு, பாலியல் துன்புறுத்தலில் இருந்து சிறந்த பாதுகாப்பு போன்றவற்றுக்காக போராடிய பல இயக்கங்கள் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முன்னேற செய்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.