இந்தியாவில் கரன்சிகள் பல மாற்றங்களை அடைந்திருக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை கரன்சிகளின் வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே வேளையில், பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகள் என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நாம் அன்றாடம் 10 ரூபாய் நோட்டு தொடங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வரை பயன்படுத்தினாலும், பூஜ்ஜிய ரூபாய் குறித்து நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. எனினும், இவை சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிடுகிறதா?
ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டாலும், பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில்லை. பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகள் தனித்தன்மை கொண்டவை. மேலும், அதற்கான சிறப்புப் பயன்பாடு இருக்கிறது. மேலும், அதன் மதிப்பும் பூஜ்ஜியம் என்பதால் அதனால் எதையும் வாங்க முடியாது.
பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது யார்?
கடந்த 2007 ஆம் ஆண்டு, `ஐந்தாவது தூண்’ என்ற அரசுசாரா நிறுவனம் ஒன்று பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி, லஞ்சம் கேட்பவர்களுக்குப் பாடம் புகட்ட முயன்றது.
வெளிநாட்டுவாழ் இந்தியரான விஜய் ஆனந்த் என்பவர் இந்தியக் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளார். ஜனநாயகத்தின் பிற நான்கு தூண்களைப் போல அல்லாமல், நாட்டில் ஊழலை ஒழிக்க `ஐந்தாவது தூண்’ பாடுபட வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இந்தியாவில் ஊழல் என்பது பல வடிவங்களில் மலிந்து கிடக்கிறது. இந்நிலையில், நீங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை லஞ்சமாக கொடுக்காமல், இந்த பூஜ்ஜிய ரூபாயை லஞ்சம் கேட்கும் அதிகாரிகளிடம் அளிக்கலாம். மதிப்பு இல்லாத பண நோட்டை அளித்து ஊழல்வாதிகளை அம்பலப்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுசாரா நிறுவனமான `ஐந்தாவது தூண்’ அமைப்பினர் பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடித்து, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். மேலும் தன்னார்வலர்கள் உதவியுடன் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கல் முதலான மக்கள் கூடும் இடங்களில் ஊழலை ஒழிக்க விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளனர். இதுவரை `ஐந்தாவது தூண்’ அமைப்பினர் சுமார் 25 லட்சம் பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்துள்ளனர்.
பூஜ்ஜிய ரூபாய் நோட்டில், `யாரேனும் லஞ்சம் கேட்டால், இந்த நோட்டைக் கொடுத்து புகார் அளியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், `நான் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என உறுதியேற்கிறேன்’ என்றும் அச்சிடப்பட்டுள்ளது.