தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்த அதிரடி முடிவு ஒன்று அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத்திற்கு இன்று வருகிறார்.  வட மாநிலங்களில் வலுவாக உள்ள பாஜக தெலங்கான உள்ளிட்ட தென் மாநிலங்களில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் என இரு நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 18 மாநில பாஜக முதல்வர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் பங்கேற்கின்றனர். 

இதனிடையே இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு திடலில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதில் தென் மாநிலங்களில் பாஜகவை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்திற்கு விமானம் மூலம்  பிரதமர் மோடி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக  அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அங்குள்ள எல்.பி நகருக்கு அருகில் வைக்கப்பட்ட பேனர் ஒன்று இந்திய அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்தது. அதில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த வெப் சீரீஸான மணி ஹெய்ஸ்ட் போஸ்டர் பாணியில்  “Mr N Modi, we only rob bank, you rob the whole nation” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதாவது நாங்கள் வங்கியைத்தான் கொள்ளை அடித்தோம், ஆனால் பிரதமர் மோடி நாட்டையே கொள்ளை அடித்துவிட்டார் என இருந்தது. 






இந்த பேனரின் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய ஸ்மிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஸ் ரெட்டி பகிர்ந்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக தங்களது மாநிலத்திற்கு பிரதமர் வந்தால் அவரை நேரடியாக விமான நிலையத்தில் சென்று வரவேற்பது முதலமைச்சர்கள் வழக்கம். இருப்பினும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இம்முறையும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் பிரதமரை வரவேற்க செல்வார் என கூறப்பட்டுள்ளது. 


ஆனால் முன்னதாக அதே விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வரவேற்றார். ஏற்கனவே தேசிய அளவில் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து 3வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ள நிலையில் சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமரை வரவேற்காமல் புறக்கணித்தது கடந்த 6 மாதங்களில் இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண