மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 267வது விதிப்படி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த விதி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


பற்றி எரியும் மணிப்பூர்:


மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக மாறி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.


முடங்கிய நாடாளுமன்றம்:


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பேச தயார் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு அவைகளிலும் விளக்க அளிப்பார் எனவும் மத்திய அரசு  தெரிவித்து வருகிறது. அதேநேரம், மத்திய அரசு சொல்லும் குறுகிய விவாதம் வேண்டாம் எனவும்,  267வது விதிப்படி விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.


பியுஷ் கோயல் விளக்கம்:


இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முறையான முறையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் தற்போது விதி 267ன் கீழ் தான் விவாதிக்க வேண்டும் என கோர்க்கையை மாற்றியுள்ளனர். வேறு எந்த பிரச்னையும் இல்லாத சூழலில் தான் இந்த விதியின் கீழ் விவாதம் நடத்தப்படும். ஆனால், தற்போது கூட்டத்தொடர் 7 நாட்கள் தொடங்கி விட்டது. அரிதினும் அரிதான சம்பவங்கள் மட்டுமே, 267வது விதியின் கீழ் விவாதிக்கப்படும்” எனவும்  விளக்கமளித்தார்.


267வது விதி:


நாடாளுமன்றத்தின் விதி 267வது என்பது மாநிலங்களவைக்கு பொருந்தக்கூடியது. மாநிலங்களவை தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் இந்த விதியின் கீழ், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அனைத்து விவாதங்களையும் நிறுத்தி வைத்து விட்டு, குறிப்பிட்ட விவகாரத்தின் முக்கியத்துவத்தின் அடிப்பட்டையில் நீண்ட நேரத்திற்கு விவாதிக்க முடியும். அதன்படி, மாநிலங்களவையில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான தங்களது கருத்துகளை பதிவிடலாம். ஆனால், குறுகிய கால விவாதத்தின் போது அனைத்து கட்சிகளுக்கும் கருத்து கூறும் வாய்ப்பு கிடைக்காது. அதனால், தான் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் 267வது விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.


விதி 267-ஐ எப்படி பயன்படுத்தலாம்?


உறுப்பினர்கள் அவசரப் பிரச்சினைகளை எழுப்ப விரும்பும் மற்றும் பொதுவான நடைமுறைகள் மூலம் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலைகளில் விதி 267 பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியின் மூலம் அன்றைய நாளில் விவாதிக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்த அனைத்தையும் ஒத்திவைக்கலாம். இந்த நோட்டீசுற்கு அனுமதி வழங்க, மாநிலங்களவை தலைவரான துணைக்குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சபையின் எந்தவொரு உறுப்பினரும் விதி 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாம்.


2016ம் ஆண்டிற்குப் பிறகு..!


ஆனால், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 267வது விதியின் கீழ் விரிவாக விவாதிக்க வேண்டும் என எத்தனையோ முறை எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், ஒருமுறை கூட அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு தொடர்பாக தான், 267வது விதியின் கீழ் விரிவாக விவாதிக்க அப்போதைய துணைக் குடியரது தலைவர் ஹமித் அன்சார் ஒப்புதல் அளித்தார்.