மணிப்பூர் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி, திருமாவளவன் ஆகிய உள்ளிட்ட 20 எம்.பிக்கள் அடங்கிய குழுவின் பட்டியலை இந்தியா எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெளியிட்டுள்ளது.


மணிப்பூர் கலவரம்:


மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக மாறி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பழங்குடியின பெண்கள் அங்கு நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.




மணிப்பூர் கலவரம்


மணிப்பூர் செல்லும் எம்.பிக்கள் குழு:


இந்நிலையில் தான், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அங்குள்ள சூழல் தொடர்பாகவும் அறிந்து கொள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, களநிலவரம் தொடர்பாக அறிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.






வெளியான பட்டியல்:


அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் 20 எம்.பிக்கள் அடங்கிய குழு வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் மணிப்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 


கனிமொழி, திருமாவளவன் அடங்கிய குழு:


அந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், ஐக்கிய ஜனதா தளத்த சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஆர். ரஹிம், மனோஜ் குமார் ஜா, ஜாவத் அலி கான், மஹுவா மாஜி, முஹம்மது ஃபைசல், மொஹம்மது பஷீர், பிரேமசந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், ஜெயந்த் சிங் மற்றும் புலோ தேவி உள்ளிட்ட பல்வேறு எம்.பிக்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர்  சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த இந்த 20 எம்.பிக்கள் இன்று மணிப்பூர் செல்ல உள்ளனர்.