பூமியில் வாழும் ஒவ்வொருவரும் தங்களது தேவைக்காக ஏதோ ஒரு உழைப்பை மேற்கொள்ள வேண்டிதான் உள்ளது. பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அந்த வேலையை தங்களின் வாழ்வாதாரத்திற்காக செய்து கொண்டுதான் இருக்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனிநபரும் வெற்றிபெற தங்கள் பணியிடங்களில் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்பதையும் தாண்டி, சிறந்ததை கொடுக்க வேண்டும்.


சில நேரங்களில் தங்கள் பணியில் சிறந்து செயல்பட வேண்டும் என்பதற்காக குடும்பத்தையே மறக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம். குடும்பத்திற்காக பணி என்பதை மறப்பதால் ஏற்படும் சலசலப்புகளும் காரசார விவாதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. தனிப்பட்ட வாழ்க்கை, பணி இரண்டையும் சமநிலையில் வைக்க தவறினால் சஞ்சலங்களே மிஞ்சும் என்பதும் மிகையல்ல...


எவ்வளவுதான் பணத்திற்காக ஓடி ஓடி உழைத்தாலும் மனநிம்மதி என்பது பணத்தால் மட்டும் கிடைப்பதா என்ன? அது ஒரு தனி ரகம்தானே...! 


பணக்காரர் பட்டியலில் இருக்கும் எத்தனையோ பேர் நிம்மதி இல்லை என்று சொல்லும் வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். கண்கூடப் பார்த்தும் இருக்கிறோம். அவ்வளவு ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட எவ்வளவு பணம் இருந்தும் வாழ்க்கையில் 10 சதவீதம் சந்தோசம், நிம்மதியைப் பார்த்தது இல்லை என மனம் திறந்து.. இல்லையில்லை.. மனம் கலங்கிப் பேசிய வரலாறும் உண்டு.  


ஆனால் இன்று, நாங்கள் உங்களுக்கு ஒரு பதிவைக் காட்டப் போகிறோம். அது ஓய்வு பெற்ற பிறகும் கடினமாக உழைக்க உங்களை ஊக்குவிக்கும். அதனால் கிடைக்கும் நிம்மதியையும் உங்களுக்கு வழங்க வழிவகுக்கலாம்.


முதியவர் ஒருவர் தனது நிம்மதிக்காகச் செய்யும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உதய்ப்பூரில் சமோசா விற்பனை செய்யும் வயதான நபர் ஒருவர் தனது வேலை குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை ஆரைன்ஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 


 






இந்த மனிதன் வீட்டில் சோம்பேறித்தனமாக இருக்காமல், தனது முதிய வயதில் எப்படி கடினமாக உழைக்கிறார். அதுவும் அவரது மகிழ்ச்சிக்காக மட்டும்தான் இந்த உழைப்பு.. அதைப்பற்றியே இந்த பதிவும் விவரிக்கிறது. 


இதுகுறித்து ஆரைன்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உதய்பூர் நீதிமன்ற வட்டத்திற்கு அருகே ஒரு போக்குவரத்து சிக்னலுக்கு அருகில் எனது காரை நிறுத்தினேன். அப்போது, கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. அங்கு ஒரு வயதான நபர் சூடாக சமோசா விற்று கொண்டிருந்தார். அதை பார்த்தேன். 


நான் ஒரு ஆர்டரை அவரிடம் சொல்லிவிட்டு அவரின் வயதைக் கருத்தில் கொண்டு இன்று ஏன் ஓய்வெடுக்கவில்லை என்று ஆர்வமாக கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு ஆச்சரியமளித்தது. வேலை குறித்த எனது பார்வையை முற்றிலும் மாற்றிய ஒன்றை அவர் என்னிடம் கூறினார்.


அவர், ‘இந்த வயதில் நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. என் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேலை செய்கிறேன். வீட்டில் தனியாக உட்காருவதை விட இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் சமைத்த உணவை 4 பேர் ரசித்து சாப்பிடும்போது அவர்களின் முகத்தை பார்க்கிறேன். அவர்களின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்கும்போது, ​​என் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது’ என்றார் 


 









உலகம் முழுவதும் வேலையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சிலர் தங்கள் ஓய்வு பற்றிய கதைகளை எழுதுகிறார்கள் என ஆரைன்ஷ் தனது எழுத்தை முடித்துள்ளார். 


இதுகுறித்த பதிவு 1.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சமோசா விற்பனையாளரின் கருத்துக்கு பலரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.