குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கறுப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலமே ஹெலிகாப்டர் விபத்து ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரிய வரும். 







உண்மையில் கறுப்புப் பெட்டி என்பது கறுப்பு நிறத்தில் இருக்காது, தெரியுமா? சர்வதேச அளவில் விமான விபத்துகளின்போது அதன் உண்மையைத் தன்மையைக் கண்டறிய விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணம்தான் இந்த கறுப்புப்பெட்டி. இது உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்தின்போது எளிதில் கண்டுபிடிப்பதற்காகவே இந்த நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் இதைப் பெட்டி எனச் சொன்னாலும், அதிக காற்று, கடல் அளவு நீர், பெரும் நெருப்பு என எதையும் தாங்கும் அளவுக்கு டைட்டானியம் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட உருளை வடிவப் பொருள் இது. கடலுக்கு அடியில் சுமார் 30 ஆண்டுகள் வரை எந்தவிதச் சேதமும் இல்லாமல் இதனால் இருக்க முடியும். கறுப்பு என்பது இறப்பு மற்றும் துக்கத்தின் நிறம் என்பதால்  மேற்கத்திய ஊடகங்களே இதற்கு கறுப்புப் பெட்டி எனப் பெயர் வழங்கின.


ஒரு விமானவிபத்து எப்படி நடந்தது என்பதை இந்தக் கறுப்புப் பெட்டி துல்லியமாகக் கூறிவிடும். கறுப்புப் பெட்டி என்பது மின்னணு சாதனங்களின் தொகுப்பு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்ன் இதனைக் கண்டுபிடித்தார். தன் அப்பா விமான விபத்தில் எப்படி இறந்தார் என்ற காரணம் தெரியாமல் போகவே தன் தந்தையைப் போன்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக வார்ன் இந்தப் பெட்டியைக் கண்டுபிடித்தார். 


இதில் இரண்டு வகைக் கருவிகள் இருக்கும். ஒன்று, டிஜிட்டர் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் எனப்படும் விமானத் தரவுகளைப் பதிவு செய்யும் கருவி. மற்றொன்று, காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் எனப்படும் விமான ஓட்டிகளின் குரலைப் பதிவு செய்யும் கருவி. ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் விமானம் விபத்தின்போது பறந்த உயரம், அதன் எரிபொருள் மற்றும் வானிலை சூழல் உள்ளிட்ட பல தரவுகளைப் பதிவு செய்திருக்கும். வாய்ஸ் ரெக்கார்டர், காக்பிட்டில் விமானிகளின் உரையாடலை 20-30 நிமிடங்கள் வரைப் பதிவு செய்யும். பெரும்பாலும் விபத்துகளின்போது விமான வால்பகுதிக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என்பதால் கறுப்புப்பெட்டி விமான வால்பகுதியிலேயே வைக்கப்பட்டிருக்கும்.


தொடக்கத்தில் ஒலி நாடாக்கள் போன்ற வடிவமைப்புகளே இந்த உருளையில் வைக்கப்பட்டிருந்தாலும் பிற்காலத்தில் சிப்கள் கொண்டு இதன் உள்வடிவம் மேம்படுத்தப்பட்டன. உலகின் மிக பயங்கர விபத்துகளின் உண்மையைக் கண்டறிய டேவிட் வார்ன் என்னும் தனி நபரின் இந்த கண்டிபிடிப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது எனலாம்.