இந்திய முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், தொடர்ந்து அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளிடம் ஊடகத்தினர் தொடர்பு கொண்டு கேட்ட போது, சில தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
அதன்படி, பனிமூட்டமும் மோசமான வானிலையும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமாக இருக்க முடியும் என்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனவும், விஐபி பயணிகளுடன் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததால் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலையிலும் பறக்கும் திறன் கொண்டது. ஆனால் நிலப்பரப்பு மலைப்பாங்கானது. ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் இருந்தே விழுந்ததாகத் தெரிகிறது” எனத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், “மலைப்பிரதேசங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று நாங்கள் கணித்திருந்தோம். சமவெளிகளுக்கு மட்டுமே மூடுபனி இருக்கும் என்று கணித்திருந்தோம். பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளுக்கு மூடுபனியை முன்பே கணிப்பது கடினம். ஏனெனில் செயற்கைக்கோள் மற்றும் ரேடார் இரண்டும் அதைப் பிடிக்க முடியாது. மூடுபனியைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே கணிக்க முடியும். அப்போதும் கூட மூடுபனியையும் மேகங்களையும் வேறுபடுத்துவது கடினம். குன்னூரில் காலை 11.30 மணியளவில் மூடுபனி அல்லது குறைந்த மேகங்கள் காரணமாக பார்வைத்திறன் கணிசமாகக் குறைந்திருக்கலாம். குன்னூரில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை 4 மிமீ மழையும், பகலில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆனால் விபத்து எப்படி, எதனால் நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விபத்து குறித்த அறிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதில் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. யுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் கருப்பு பெட்டியை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீரர்களின் உயிரிழப்புக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று டில்லியில் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெர்விக்கப்பட்டுள்ளது.
இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று ராணுவ மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல மலர் அலங்காரம் செய்யப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மருத்துவமனை வந்தடைந்தன. சற்று நேரத்தில் ராணுவ வீரர்கள் உடல்கள் ராணுவ பயிற்சி மையத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்