கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 


விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.


இந்தநிலையில்,  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கடைசியாக பறந்து சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான காட்சிகளில், அதிவேகமாக பறந்து சென்ற M-17  வகை ஹெலிகாப்டர் அடர்ந்த பனி மூட்டத்திற்குள் சென்று அதன்பிறகு அதன் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. 


இதனிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழு தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களை சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஏற்கனவே, பனிமூட்டமும் மோசமான வானிலையும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமாக இருக்க முடியும் என்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனவும்,  விஐபி பயணிகளுடன் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததால் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்று விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 


எதனால் விபத்து நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விபத்து குறித்த அறிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதில் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண