India New Shoe Size System: பல்வேறு வயதினருக்கு மிகவும் வசதியான பொருத்தமான காலனியை உருவாக்க, பாதத்தின் நீளம் மட்டுமல்ல, அகலத்தையும் கணக்கிடுதல் அவசியம் என ”பா” அளவு முறையை இந்தியா கொண்டுவரவுள்ளது.
காலணி அளவு முறை:
டிசம்பர் 2021 இல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CLRI) இணைந்து இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘இந்திய காலணி அளவு முறையை’ ( BHA ) உருவாக்கியுள்ளது.
தற்போது, இந்தியாவில் காலணி அளவு முறையானது ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், இந்தியருக்கு ஏற்ற வகையில் காலணி உருவாக்கும் வகையில் பா அளவு முறையானது இருக்கிறது என கூறப்படுகிறது.
( BHA ) ‘பா’ முறை:
பாரதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ( BHA ) ‘பா என பெயரிட முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி, இந்தியாவில் காலணி உற்பத்தி முறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் 2025 ஆம் ஆண்டளவில், தற்போதுள்ள UK/ஐரோப்பிய மற்றும் US அளவு அமைப்புகளை ‘பா’ அளவு முறையானது மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு வயதினருக்கு மிகவும் வசதியான காலணி பொருத்தத்தை உருவாக்க, பாதத்தின் நீளம் மட்டுமல்ல, அகலத்தையும் கருத்தில் கொள்ளும் வகையிலும் பா அளவு முறையானது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியர்களிடம் சுமார் ஒரு வருடத்திற்கு சோதனைகள் நடத்தப்படும் என்றும், இச்சோதனையில், 5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட சுமார் 10,000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இச்சோதனைகளின் முடிவுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியருக்கு பொருத்தம்:
மற்ற நாடுகள் இந்திய காலணி அளவு முறையை பின்பற்றுமா? என்று கேட்டபோது, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா உள்ளதால், இந்திய அளவு முறையை, மற்ற பிராண்டுகள் பின்பற்றவது அவர்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் என தெரிவித்துள்ளது.
சிலருக்கு காலணி எந்த அளவு வாங்கினாலும், சரியாக பொறுத்தம் இல்லை என்றே கூறுவதை கேட்டிருப்போம். அதற்கு காரணம் என்னவென்றால், தற்போது உள்ள வெளிநாட்டு காலணி அளவு முறையானது, வெளிநாட்டவர்களை சோதனையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதால், பொருத்தம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அளவு முறை இந்தியர்களை கொண்டு சோதனை செய்யப்படுவதால், இந்தியர்களுக்கான காலணி அளவு பொருத்தமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.