மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத்துறை இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. இந்தத் தொகையானது ஆசிரியர் பணி நியமன மோசடியில் கிடைத்த தொகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் அர்பிதா முகர்ஜி இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தில், முகர்ஜியும் பானர்ஜியும் ஒன்றாக இருப்பதைக் காணலாம்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது சுவேந்து அதிகாரியின் மறைமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
"இது தொடர்பாக யார் சிக்கி உள்ளார்களோ, அந்த நபரே விளக்கம் அளிக்க வேண்டும். இதில் கட்சியின் பெயர் ஏன் இழுக்கப்படுகிறது என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். சரியான நேரத்தில் நாங்கள் அறிக்கை வெளியிடுவோம்" என குணால் கோஷ் ட்வீட் செய்துள்ளார்.
இது தவிர, அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலர்கள் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டிலும் சோதனை நடத்தினர். ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
மேற்குவங்கத்தை அதிரவைத்துள்ள அர்பிதா முகர்ஜிக்கும் மம்தா கட்சிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
- அர்பிதா முகர்ஜி, மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
- தெற்கு கொல்கத்தாவின் புகழ்பெற்ற துர்கா பூஜைக்கும் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது 2019 துர்கா பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றை, சுவேந்து அதிகார் வெளியிட்டுள்ளார். இந்த பூஜையில் சாட்டர்ஜியும் கலந்து கொண்டுள்ளார்.
- பார்த்தா சாட்டர்ஜியின் துர்கா பூஜை கமிட்டியின் விளம்பரப் பிரசாரங்களின் முகமாக முகர்ஜி இருந்துள்ளார். சில வங்க படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்