மக்கள் தொகையை குறைப்பது குறித்து பாஜக மக்களவை உறுப்பினர் ரவி கிஷன் இன்று தனி நபர் மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளார். 2023ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தும் என ஐநா அறிக்கை வெளியிட்ட நிலையில், எம்பியின் செயல் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.




உத்தரப் பிரதேச கோரக்பூர் தொகுதி பாஜக எம்பியான ரவி கிஷனின் இந்த தனி நபர் மசோகா, எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என தனி நபர் மசோதாவை கொண்டு வந்த ரவி கிஷனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இதனைக் குறிப்பிட்டு பதிவிடும் சோஷியல் மீடியாவாசிகள் 4 குழந்தைகளுக்கு தந்தையான நீங்கள் கூறலாமா என எம்பியை கலாய்த்து வருகிறார்கள்.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக உள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ள வைக்கப்பட்டுள்ளது.


ஐநா அறிக்கையைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உள்பட பல தலைவர்கள் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.


உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பேசி கிரிராஜ் வீடியோ வெளியிட்டிருந்தார்.




இதற்கு பதில் அளித்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மக்கள் தொகை பெருக்கம் குறித்து வாதத்தை முற்றிலுமாக நிராகரித்தார். மேலும், மக்கள்தொகை பெருக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் போலி செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்தியாவின் கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்கு கீழே உள்ளது. மக்கள்தொகை வெடிப்பு என்றெல்லாம் இல்லை" என்றார்.


நாட்டில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு குறித்து ஆர்எஸ்எஸ் பலமுறை கவலை தெரிவித்ததுடன், மக்கள் தொகைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.




உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை அனுமதிக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.


உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேசிய அவர், "குடும்பக்கட்டுப்பாடு/மக்கள்தொகை நிலைப்படுத்தலை பொருத்தவரை, ​​மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும். ஆனால் அதே சமயம், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண