கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் காரணமாக திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 3 வருடத்தில் இந்த வைரஸ் மூலம் முதல் நபர் தற்போது பலியாகியுள்ளார். கொசுதான் இந்த காய்ச்சலுக்கு பிரதானமான காரணமாக இருப்பதாகவும்,கொசுக்கடியில் இருந்து மக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேரள சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.


 வெஸ்ட் நைல் வைரஸ்? (West Nile Virus)


வெஸ்ட் நைல் வைரஸ், கிளக்ஸ் (Culex ) என்ற வகை கொசுக்கள் மூலம் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்களிடமிருந்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. இது Flaviviridae வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நைல் வைரஸ் தாக்கிய பறவைகளின் ரத்தத்தை குடிக்கும் கொசுக்களுக்கு வைரஸ் தொற்றிகொள்கிறது. பின்னர், அது மனிதர்களிடம் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்படுபவரின் ரத்தத்தில் கலந்து உடல்நிலையில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.




வெஸ்ட் நைல் வைரஸ் இரத்தம் பரிமாற்றம் செய்யப்படும்போது மற்றரையும் பாதிக்கிறது. அதாவது கருவுற்றிருக்கும் தாய் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும். 


அதன் மூலம் யாருக்கு அவரின் இரத்தம் பயன்படுத்தப்படுகிறதோ, அவருக்கு தொற்று அபாயம் ஏற்படும். ஆனால், இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவருடம் அருகில் இருந்தோலோ, பேசினாலோ, மற்ற மனிதருக்கு, விலங்கிற்கு இது பரவாது. 


தீவிர நடவடிக்கை எடுக்கும் கேரளா..


இந்த வைரஸுக்கு ஏற்கெனவே ஒருவர் இறந்துவிட்ட நிலையில் தீவிர நடவடிக்கையில் கேரள இறங்கியுள்ளது. குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தை மருத்துவ கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேரள சுகாதாரத்துறை, '' சிறப்பு மருத்துவக்குழு ஒன்று திருச்சூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவரின் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரம் முழுவதும் வெஸ்ட் நைல் குறித்த பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் எடுக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதேவேளையில் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும் என்பதால் கொசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கபடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.




கொசு..


இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ''வைரஸ் பரவ முக்கியக் காரணமாக இருக்கும் கொசுவை ஒழிக்கவே தீவிரம் காட்டி வருகிறோம். அரசு மட்டுமே நடவடிக்கை எடுத்தால் போதாது, பொதுமக்கள் ஒவ்வொருவரும் கொசு ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது சுற்றுப்புறங்களை  சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி ஏற்படும் நிலை இருந்தால் உடனடியாக அதனை சுத்தம் செய்ய வேண்டும்’’ என்றார்.