பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்நிலையில் அவரது பாடல்களை குறிப்பிட்டு ரசிகர்கள் பல மர்மமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். 


சுட்டுக்கொலை..


பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து டாக்டர் ரஞ்சீத் ராய் பேசுகையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் சித்து மூஸ் வாலா இறந்து விட்டதாகவும்,  முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.


முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 




எல்லாமே மர்மம்..


பாடகர் நேற்று மரணமடைந்த நிலையில் அவரது பாடல்களை குறிப்பிட்டு ரசிகர்கள் பல மர்மமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். தனக்கு அனைத்துமே தெரிந்தது போல தன்னுடைய பாடல்களில் பல விஷயங்களை சித்து குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.இது எதார்த்தமானதாகவே இருந்தாலும் ஆச்சரியமாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.


The Last Ride..


கடைசியாக சித்து மூஸ்வாலா வெளியிட்ட ஆல்பத்தின் பெயர் The Last Ride. கார் புகைப்படத்துடன் கூடிய தி லாஸ்ட் ரைட் என்பதே அவரது கடைசி பாடலாக இருந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ரசிகர்கள், சித்துவின் கடைசி பாடல் போலவே அவரது கடைசி பயணமும் காரிலேயே முடிந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.


அதேபோல கடந்த ஆண்டு வெளியான ஒரு பாடலுக்கு  295 என்ற பெயர் வைத்துள்ளார் சித்து. நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட தினமும் 29-5 என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறிப்பாக சித்துவின் கடைசி பாடல்களில் சில  வரிகள் அவரது இறப்பை குறிப்பது போலவே உள்ளது. அந்த வரிகள், '' இளமையிலேயே இறுதிச்சடங்கு நடக்கும் என்ற பிரகாசம் அவனது முகத்தில் தெரிகிறது’’ என்பதுதான். 28 வயதில் படுகொலை செய்யப்பட்ட சித்துவின் மரணத்துக்கு ஏற்ப அந்த வரிகள் இருபதாக ரசிகர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.