மேற்கு வங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடித்து வைப்பதாக (Proruge) அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளையும் மம்தா பானர்ஜி கலைப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற, அடுத்தடுத்த சம்பவங்கள் மேற்குவங்க அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.   


முன்னதாக, பம்தா பேனர்ஜியின் தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையில்லாமல், அவையை ஆளுநர் முடக்கியுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் , இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்த ஆளுநர், மாநில அமைச்சரவை அளித்த பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, 174 (2) (a) அரசியலமைப்பு விதியின் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திதான் 2022, பிப்ரவரி 12-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாள் என்று அறிவித்தேன் என்று தெரிவித்தார்.




மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பெயரில் தான் ஆளுநர் அவையை முடித்து வைத்தார் என்பதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும் பின்பு உறுதிப்படுத்தினார்.  


எனவே, மாநில அரசு சட்டமன்ற அவையை ஏன் முடித்து வைக்க வேண்டும்? அதன் விளைவுகள் என்ன? சட்டமன்ற அவையை முடிப்பதற்கான ஜனநாயக நெறிமுறைகளை என்ன என்பதை இங்கே காண்போம்.     


மாநில சட்டமன்றம்: 


பொதுவாக, நாடாளுமன்ற ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் ஒரு நாட்டில், நாடாளுமன்றம் (சட்டப்பேரவை), நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 அங்கங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயல்படுவதைத்தான் அரசு என்று கூறுகிறோம். இந்த மூன்று அங்கங்களும், தன்னிச்சையாக செயல்படக்கூடியவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைக் கேள்விகேட்கும் இடத்தில் சட்டப்பேரவை உள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்கான சட்டமியற்றும் உரிமையையும் அது கொண்டுள்ளது.


ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்டபேரவைத் தேர்தல் தான் நடைபெறுகிறது. வாக்காளர்கள் நேரடியாக முதல்வரை தேர்ந்தடுப்பதில்லை. சட்டப்பேரவையின் முழு நம்பிக்கை பெற்ற (பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு) ஒருவரே முதல்வராக நீடிக்க முடியும். அரசியல் மரபின்படி, அவையின் நம்பிக்கை இழந்த முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். எனவே, முதல்வரை தக்கவைத்துக் கொள்ள  வேண்டிய/செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பும் சட்டப்பேரவைக்கு உண்டு.    




 


ஆனால், இந்தியாவில் சட்டப்பேரவைக்கும், நிர்வாகத்திற்கும் இடையேயான லக்ஷ்மண ரேகை மிகக் குறைவு. உதாரணமாக, அரசியலமைப்பு பிரிவு 168-ன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்குமென சட்டமன்றம் ஒன்று இருக்கும். இது ஆளுநரையும், பிகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு அவைகளையும், மற்ற மாநிலங்களில் ஒரு அவையினையும் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஆளுநரும்  (மாநில அமைச்சரவை)  சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார்.  


சட்டப்பேரவையில் ஆளுநரின் பங்கு:  


மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் உற்றமைந்திருக்கும் (பிரிவு  154); 


ஆனால், முதலமைச்சரைத் தலைவராக கொண்ட மாநில அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் தனது பணிகளை ஆற்றுவார் (பிரிவு - 163(1))  


ஆளுநர் தாம் தக்கதெனக் கருதும் காலத்திலும்,இடத்திலும் கூடுமாறு அவ்வப்போது மாநிலச் சட்டமன்ற அவைக்கு அழைப்பாணை (Summoning by the Governor) விடுப்பார்; ஒரு கூட்டத்தொடரின் கடைசி அவர்வுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வெனகக் குறிப்பிடப்படும் தேதிக்கும் இடையேயுள்ள காலஅளவு ஆறு மாதங்களுக்குக் குறைவாகவே இருத்தல் வேண்டும். (பிரிவு 174)


ஆளுநர், அவ்வப்போது அவையின் அல்லது கூட்டத் தொடரினை இறுதிசெய்யலாம் (Prorogation);


சட்டமன்றப் பேரவையைக் கலைத்துவிடலாம் (Dissolution) 


இந்திய அரசியலமைப்பு பிரிவு 154, 163(1), 174 ஆகியவற்றைச் சேர்த்து வாசித்தால், சட்டப்பேரவை அவைக்கு அழைப்பு விடுவதற்கும், கூட்டத் தொடரினை இறுதி செய்வதற்கும், சட்டப்பேரவையைக் கலைப்பதற்குமான முழு அதிகாரம் மாநில அமைச்சரவை பரிந்துரையின் பேரில் செயல்படும் ஆளுநருக்கு உண்டு" என்று தெரிவித்தார்.   


இருந்தாலும், ஒரு மாநிலத்தின் அரசியல் பல்வேறு யதார்த்த நடைமுறைகளைக் கொண்டுள்ளது. அவையில் முதல்வர் பெரும்பாண்மையை இழக்க நேரிடலாம். மாநில அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல்கள் அதிகரிக்கலாம். அத்தகைய சூழலில், ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையைத் புறக்கணிக்கும் விதத்தில் செயல்படத் தொடங்குகிறார். 


உதாரணமாக, கடந்த 2017ம் ஆண்டு, அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநரைச் சந்திக்கத் திட்ட மிட்டிருந்தார். அப்போது, சசிகலாவுக்கு 130க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிராமணம் செய்து வைத்து, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்திருக்கலாம். ஆனால், மும்பையில் இருந்த வித்யாசாகர் ராவ் சென்னை வருவதை தாமதப்படுத்தினார். இந்த சூழலில், சசிகலாவுக்கு ஆதரவளித்து வந்த ஒ. பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமைக்கு  எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். அதே நேரத்தில், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது. சசிகலா சிறைக்குச் சென்றார். சட்டப்பேரவைக்கு அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்தியதால் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத சூழல் உருவானது.     


மற்றொரு உதாரணமாக, கடந்த 1967ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவினர். இதனால், அரசு தனது பெரும்பான்மையை இழக்கும் சூழல். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத் தயாராக இருந்த நிலையில், அவையை முடித்து வைப்பதாக ஆளுநர் (முதலமைச்சரின் பரிந்துரையின் பெயரில்) அறிவித்தார். முதல்வருக்கு சாதகமாக செயல்பட்ட ஆளுநர், அவையை முடக்கியதால், காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது.   


எனவே, பல்வேறு அரசியல் யதார்த்தங்களின் மத்தியில்தான்  ஒரு அவையைக் கூட்டப்படுகிறது, முடித்து வைக்கப்படுகிறது, கலைக்கப்படுகிறது. 


கூட்டத் தொடரினை இறுதிசெய்வதென்றால் என்ன? (Prorogation); 


இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியன், "பொதுவாக,பட்ஜெட் கூட்டத் தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என  ஆண்டுக்கு இரண்டுமுறை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடத்தப்படும். 174(2) சட்டப்பிரிவின் படி, கூட்டத் தொடரின் இறுதி நாளை ஆளுநர் அறிவிப்பதே Prorogation என்று அழைக்கப்படுகிறது. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். அவையை முடித்து வைப்பது தொடர்பாக முதலமைச்சர் தமக்கு தேவையெனக் கருதினால் ,  அமைச்சரவை சகாக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுப்பெறலாம். பொதுவாக, ஒரு கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவிப்பார். அதன்பின், குறைந்தது நான்கு/ஐந்து நாட்களுக்குப் பிறகு அவையை இறுதி செய்வதாக (Proruge) ஆளுநர் உத்தரவிடுவார்.   



தேதி குறிப்பிடாமல் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்த பிறகு, அவையை முடித்து வைப்பதற்கான  முதலமைச்சரின் விருப்பத்தை சட்டப்பேரவைச்' செயலாளருக்கு அவைத்தலைவர் (Leader of the House) அனுப்பி வைப்பார். சபாநாயகரின் ஒப்புதல் பெற்ற பிறகு, இந்த தகவலை (Proposal) ஆளுநருக்கு  சட்டப்பேரவைச்' செயலாளர் அனுப்பி வைப்பார். ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகு, இது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும். 


மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையே  கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. முன்னதாக, திரிணாமூல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், விதி எண் 170-ன் கீழ் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,  இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தும் ஆளுநர் ஜெகதீப் தங்கரை குடியரசுத் தலைவர் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தான், சட்டப்பேரவையை உடனடியாக முடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி எடுத்திருக்கலாம். ஏனெனில், அரசியலமைப்பு பிரிவு 175-ன் கீழ், சட்டமன்ற அவையில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் ஆளுநருக்குள்ள முழு உரிமையுண்டு. இதுபோன்ற, ஆளுநர் எதுவும் செய்யாமல் இருப்பதற்காக சட்டப்பேரவையை மம்தா பேனர்ஜி முடித்து வைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்.  


அவையை இறுதி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன?  


பொதுவாக, ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை மக்களின் குரலாக ஒலிக்கிறது. நேர்மை, வெளிப்படைத் தன்மை,நாணயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு சட்டப்பேரவைக்கு உண்டு. எனவே, சட்டப்பேரவையின் கண்காணிப்பில் இருந்தும் தலையீட்டில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற பொதுவான எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வருவதுண்டு. உதாரணமாக, கடந்தாண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ், விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இதன்காரணமாக, ஒருநாள் முன்னதாகவே இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.


மேலும், சட்டப்பேரவையில் பெரிய விவதாங்கள் இல்லாமல் சில அவசரகாலச் சட்டங்களை கொண்டு வர ஆட்சியாளர்கள் விரும்பினால், அவையை உடனடியாக முடித்து விடுவார்கள். அரசியலமைப்பு பிரிவின் 213ன் படி, சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின் போது, அவசரச் சட்டங்களை கொண்டு வருவதற்கு ஆளுநருக்கு (மத்தியில்- குடியரசுத் தலைவருக்கு) முழு அதிகாரமுண்டு (Power of Governor to promulgate Ordinances during recess of Legislature). 


உதாரணமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியன் போது, பிற  ஊதியப் பணிகளை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்க செய்யும் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர முயன்றது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. கடுமையான அமளியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அவையை முடித்துவைப்பதாக குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். பின்பு, இந்த மசோதா அவசரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.  


எனவே, பல்வேறு சமயங்களில் அவையின் சுயாதீனத்தை கேள்வி கேட்கும் விதமாகவும், அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் அவை முடித்து வைக்கப்பட்டு வருகிறது.