மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வங்காள மொழியின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மாதிரி தாளில் கேட்கப்பட்ட கேள்வி இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வழக்கமாக அந்த மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.


இந்த நிலையில், அதற்கான வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்பு புத்தகமாக தயாரிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் புத்தகத்தில் ஆசாத் காஷ்மீர் வரைபடத்தை காட்டவும் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதாவது, ஆசாத் காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பொருள்படும். 132வது பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மேற்கு வங்காள அரசுக்கும், அந்த மாநில கல்வி வாரியத்திற்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.




இந்த சம்பவம் தொடர்பாக, அந்த மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் திலீப்கோஷ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மம்தா தலைமையிலான அரசு ஆன்டி – இந்தியா மனப்பான்மையை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், பல பா.ஜ.க. தலைவர்களும் இந்த விவகாரத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள பள்ளிக்கல்வி தலைவர் ராமானுஜ் கங்கோபத்யாய் அளித்துள்ள விளக்கத்தில்,  “எங்களது நிபுணர்கள் வினாத்தாளை ஆய்வு செய்வார்கள். யார் இந்த வினாத்தாளை உருவாக்கியது? இதற்கு ஒப்புதல் வழங்கியது யார்? என்று கண்டறியப்பட்டு சட்டவிதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்தும் சட்டவிதிப்படி நடக்கும்” என்று கூறியுள்ளார்.




இந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி எம்.பி.யான சாந்தனுசென் கூறியிப்பதாவது,  “பள்ளிக்கல்வி ஆணையம் தனது கடமையை செய்யும். ஆனால், பா.ஜ.க.விற்கு இதைப்பற்றி பேசுவதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை. தேசிய கல்விக்கொள்ளை 2022 மூலம் நாட்டின் கல்வி முறையை காவிமயமாக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.


இந்த கேள்வித்தாள் விவகாரம் தற்போது மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக நிகழ்ந்து வருகிறது. மேலும், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதனால், காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நிகழ்ந்து வருகிறது.


மேலும், பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதால் அவர்களுடனும் இந்திய ராணுவம் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ.க. இந்த விவகாரத்தில் பெரியளவில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ShareChat Lay Offs : தொடரும் பணிநீக்கங்கள்...500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஷேர்சாட்...அதிர்ச்சியில் ஊழியர்கள்...


மேலும் படிக்க: RVM :புலம்பெயர்ந்த நபர்களும் வாக்களிக்க புதிய வசதியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; புதிய இயந்திர செயல் விளக்கம் கூட்டத்தில் பரபரப்பு!