மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் ஏற்கனவே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 


மேற்குவங்கத்தை உலுக்கும் சம்பவங்கள்: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை முன்வைத்து மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்கத்தில் செவிலியர் ஒருவரை நோயாளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியுள்ளார்.


நேற்று இரவு, பிர்பூமில் உள்ள இளம்பஜார் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கையில், அவர் செவிலியரை தகாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.


சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இருந்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்த செவிலியர், "நான் மருத்துவரின் அறிவுறுத்தலை பின்பற்றிக்கொண்டிருந்தபோது, ​​ஆண் நோயாளி என்னிடம் தவறாக நடந்துகொண்டு, என்னுடைய அந்தரங்க உறுப்புகளில் தகாத முறையில் என்னைத் தொட்டார். மேலும், தகாத வார்த்தைகளை சொல்லி திட்டினார்.


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு நோயாளி தன் குடும்பத்தினர் முன்னிலையில் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி செய்ய எப்படி துணிவு வரும்?" என்றார்.


இந்த சம்பவத்தால் சுகாதார நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், காவல்துறை அதிகாரிகளை மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நோயாளியை கைது செய்தனர்.


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் சேக்ரட் ஹார்ட் பள்ளி அருகே இரண்டு பெண்களை சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். கொல்கத்தா சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே உத்தரகாண்ட் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருந்தது.