பீகார் மாநிலம் பெகுசராய் நகரில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தனது சொந்த தொகுதியில் 'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.


மத்திய அமைச்சரை தாக்க முயன்ற நபர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் கிரிராஜ் சிங். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தான் போட்டியிட்ட வெற்றிபெற்ற பெகுசராய் தொகுதியில் நடைபெற்ற 'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டார்.


நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது, கிரிராஜ் சிங்கின் மைக்கை பிடுங்கி அவரை ஒரு நபர் குத்த முயன்றார். இருப்பினும், அங்கிருந்த கட்சியினரும் பாதுகாப்புப் படையினரும் அவரை காப்பாற்றினர். இதுகுறித்து வீடியோ மெசேஜ் வெளியிட்ட அவர், "நான் நிகழ்விலிருந்து வெளியேறும் போது, ​​எனது மைக்கை வலுக்கட்டாயமாக எடுத்து என்னை தாக்குவது போல் ஒருவர் நடந்து கொண்டார். 'முர்தாபாத்' கோஷங்களை எழுப்பினார். இதுபோன்ற தாக்குதல்களுக்கு நான் பயப்படவில்லை.


நான் கிரிராஜ் சிங். சமுதாய நலன்களுக்காக எப்போதும் பேசுவேன். போராடுவேன். இதுபோன்ற விஷயங்களுக்கு கிரிராஜ் சிங் பயப்படவில்லை. மத நல்லிணக்கத்தை கெடுக்க விரும்புபவர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவோம்" என்றார்.


 






ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அந்த நபரிடம் கையில் ரிவால்வர் இருந்திருந்தால் என்னை தாக்கிய விதத்தில் கொன்றிருப்பார். எனினும், அவரது தாக்குதல் தோல்வியடைந்தது. அவர் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். எத்தனை பயங்கரவாதிகள் வந்தாலும் அது என்னை பாதிக்காது" என்றார்.