மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மரணம் அடைந்தாலோ, சுய நினைவு இல்லாமல் இருந்தாலோ, வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்/ நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் வகையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா இன்று மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.


அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா


இதை மாநிலத்தின் சட்டத் துறை அமைச்சர், மொலோய் கட்டக் அறிமுகம் செய்தார். அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா (aparajita women and child bill 2024) என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. 


இந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மரணம் அடைந்தாலோ, சுய நினைவு இல்லாமல் இருந்தாலோ, வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்/ நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாமீனும் வழங்கப்படாது.


மசோதா தாக்கல் செய்யப்பதைத் தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ’’பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் போரிடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.


மேற்கு வங்க அரசு உண்மையிலேயே வேகமாக செயல்பட்டு, விசாரணையை மேற்கொண்டது. சம்பவம் நடந்த அன்றே நான் பெண் மருத்துவரின் பெற்றோரிடம் பேசினேன்.






12 மணி நேரத்தில் குற்றவாளி கைது


சம்பவம் நடந்து 12 மணி நேரத்துக்கு உள்ளாகவே முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டார். எனினும் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விரைந்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.