Cow Smuggler: பசு கடத்தல்காரர் என தவறுதலாக கருதி மாணவரை சுட்டுக் கொன்றது, விசாரணயில் தெரிய வந்துள்ளது.


மாணவரை சுட்டுக் கொன்ற பசு காவலர்கள்:


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 19 வயதான ஆர்யன் மிஸ்ரா என்ற 12-ம் வகுப்பு மாணவனை மாடு கடத்துபவர் என்று தவறாக நினைத்து, பசு காவலர்களால் காரில் துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக,  பசு காவலர் குழுவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சௌரப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல்,  ஆர்யன் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர்களான ஷங்கி, ஹர்ஷித் மற்றும் இரண்டு சிறுமிகளை டெல்லி-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 


நடந்தது என்ன?


சம்பவ தினத்தின்போது, ரெனால்ட் டஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில், கால்நடைகளை கடத்துபவர்கள் நகருக்குள் சென்று கால்நடைகளை ஏற்றிச் செல்வதாக பசு காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. aதன்படி, அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ​​ஒரு டஸ்டர் காரைக் கண்ட கும்பல், அதனை நிறுத்த வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், அவர்கள் காரை நிறுத்தவில்லை. காரில் இருந்த ஷங்கிக்கு யாரோ ஒருவருடன் பகை இருப்பதாகவும்,  அவர்கள் தான் தங்களை கொல்ல குண்டர்களை அனுப்பியதாகவும் கருதி காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.


இதையடுத்து பசு காவலர்கள் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  அதில் ஒரு தோட்டா ஆர்யன் கழுத்தின் அருகே தாக்கியது. இதையடுத்து காரை நிறுத்தியபோது அவரை, அந்த கும்பல் மீண்டும் சுட்டுள்ளது. இரண்டாவது தோட்டா ஆர்யனின் மார்பில் பாய்ந்தது. அதைதொடர்ந்து காரில் இரண்டு சிறுமிகளை பார்த்தபோது தான், ​​ தவறான நபரை சுட்டதை உணர்ந்து பசு காவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆர்யன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, தாக்குதலின்போது ஆர்யனிடமும் துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.


தொடரும் அவலங்கள்:


குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் கொலை ஆயுதத்தை கால்வாயில் வீசியதாக கூறி, விசாரணையை தவறாக வழிநடத்த முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், ஆயுதம் பின்னர் அனிலின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. ஹரியானாவின் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பேரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பசு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது . அந்த கொலையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.