பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை மம்தா தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்:
இன்று ஜூலை 27, நடைபெறும் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டமானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்துள்ளது, இந்திய அரசியல் சூழலில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு - பங்கேற்ற மம்தா:
2024 பட்ஜெட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. இது "பழிவாங்கும் பட்ஜெட்" என்று எதிர்க்கட்சிகள் முன்னதாகவே புறக்கணிப்பை அறிவித்தன. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பாஜகவை புறக்கணித்த மாநிலங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பழிவாங்கும் செயலாகத் தெரிகிறது. இந்திய அணிக்கு வாக்களித்தவர்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் தயாரித்துள்ளார். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து , இந்தியா கூட்டணியை சேர்ந்த மம்தாவை தவிர இதர முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
எங்களது மாநிலத்தின் பிரச்னைகளை, குரல்களை கூட்டத்தில் எடுத்துரைக்க செல்கிறேன் என்று மம்தா தெரிவித்திருந்தார்.
வெளிநடப்பு:
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பேசியதாவது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று நான் கூறினேன். நான் பேச விரும்பினேன், ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். 10-20 நிமிடம் நான் மட்டுமே பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நான் பேசும்போது எனது மைக் நிறுத்தப்பட்டது. ஏன் என்னைத் தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். நான் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன், அதற்குப் பதிலாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இங்கு, நான் மட்டுமே எதிர்க்கட்சியாக இருந்து வருகிறேன், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்காளத்தை மட்டுமல்ல, அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும் என மம்தா தெரிவித்தார்.