ரயிலில் விபத்து தடுக்கும் கருவி பொருத்தப்படாதது தான் இந்த விபத்துக்கான காரணம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 


கோர விபத்து:


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


இதுவரை இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் இயந்திரங்கள் மூலம் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நூற்றாண்டின் கடந்த ரயில் விபத்துகளில் இதுவே மிக மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரில் பார்வையிட்ட மேற்கு வங்க முதல்வர்: 






ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்தை மேற்கு வங்க முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர்,  "கோரமண்டல் சிறந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்றாகும். நான் மூன்று முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன். நான் பார்த்ததில் இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து. இது போன்ற விபத்துகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் ரயிலில் விபத்தை தடுக்கும் கருவி (கவாச் பாதுகாப்பு அம்சம்) எதுவும் இல்லை, அந்த கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இறந்தவர்களை மீட்க முடியாது, ஆனால் இப்போது எங்கள் பணி மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு இயல்புநிலையை மீட்டெடுப்பதாகும்" என கூறியுள்ளார்.


மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.