தவறான சிக்னல் காரணமாக தான் ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து நேர்ந்ததாக, ரயில்வே துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


முதற்கட்ட விசாரணை:


ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த மோசமான நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.


சிக்னல் கோளாறு காரணமா?


அதன் முதற்கட்ட விசாரணையின்படி ”சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் உடனடியாக சிக்னல் ரத்து செய்யப்பட்டதால் அவசர கதியில் லூப் லைனுக்கு சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிவேகமாக சென்ற கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு முன்னதாகவே ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலானது தடம்புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக விபத்திற்கு மனித பிழைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது” தெரிய வந்துள்ளது. அதேநேரம், இந்த சம்பவம் நிகழ்வதற்கு முக்கிய காரணம் மனித பிழையா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.