பாஜக தலைவர் சௌமித்ரா கான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை `நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் அரசியல் தாய்’ என்று வர்ணித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லையோரப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோமீட்டர்களில் இருந்து 50 கிலோமீட்டராக உயர்த்தும் மத்திய அரசின் உத்தரவின் மீது தலையிட்டு, அதனைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதியிருந்தார். 


இதுகுறித்து பேசியுள்ள பாஜக தலைவர் சௌமித்ரா கான், பிரதமர் நரேந்திர மோடி மம்தா பானர்ஜியின் கோரிக்கையைக் கண்டுகொள்ளக் கூடாது எனவும், மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை அழித்தது போல, நாட்டை அழிக்கும் முயற்சியில் இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். 



சௌமித்ரா கான்


 


`மம்தா பானர்ஜி நாடு முழுவதும் இருக்கும் தீவிரவாதிகளின் அரசியல் தாய். ஏனென்றால் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது, அதனை அவர் எதிர்த்தார். தேசியக் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்ட போது, அவர் அதனை எதிர்த்தார். ஏனெனில் அவர் இந்தியாவை `தர்மஷாலா’ போல மாற்ற விரும்புகிறார். ரோஹிங்க்யாக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இங்குள்ள மக்களைக் கொன்று, இந்திய அரசின் பணத்தைத் திருடுவதற்கு இந்தியா என்ன தர்மஷாலாவா?’ என்று பாஜக தலைவர் சௌமித்ரா கான் கூறியுள்ளார். 


தொடர்ந்து அவர் மம்தா பானர்ஜி ரோஹிங்க்யா சமூக மக்களுக்கு ஆதரவு தருவது நாட்டின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்காகவே எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


`மம்தா பானர்ஜி ரோஹிங்க்யாக்களுக்கு ஆதரவளித்து நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்கத் திட்டமிடுகிறார். எல்லையோரப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோமீட்டர்களில் இருந்து 50 கிலோமீட்டராக உயர்த்துவதால் தீவிரவாதிகளால் நுழைய முடியாது என்பதால் மம்தா பானர்ஜி வருந்துகிறார். அவரது அரசியல் என்பது இதுவே என்பதால் அவர் இதனை எதிர்க்கிறார்’ என்றும் சௌமித்ரா கான் கூறியுள்ளார். 



மம்தா பானர்ஜி


 


மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரும் மம்தா பானர்ஜியின் முயற்சி குறித்து பேசிய சௌமித்ரா கான், மம்தா பானர்ஜி மாநிலங்களின் மீதும், சட்டமன்ற விதிகளின் மீதும் நம்பிக்கை இல்லாதவராக இருப்பதாகவும் தெரிவித்தார். `நாட்டின் கட்டமைப்பு மீது மம்தா பானர்ஜிக்கு எப்போதாவது நம்பிக்கை இருந்திருக்கிறதா? அவருக்கு மாநிலங்களின் மீது நம்பிக்கை இல்லை. அவர் சட்டமன்றத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. நாட்டை எதிர்ப்பது அவரின் பணியாக மாறியுள்ளது' என்றும் கடுமையாகச் சாடியுள்ளார் சௌமித்ரா கான். 


கடந்த அக்டோபர் மாதம், மத்திய அரசு பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லையோரப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோமீட்டர்களில் இருந்து 50 கிலோமீட்டராக உயர்த்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.