மேற்குவங்க சட்ட மன்றம் முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றம் முடக்கப்பட்டதாகவும், உண்மையை உறுதி செய்துகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தும்படி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் முக்கிய தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது’ எனப் பதிவிட்டார்.
முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளை அந்த மாநில ஆளுநர் அறிவித்த சூழலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளையும் மம்தா பானர்ஜி கலைப்பதாக அறிவித்தார்.
அவரது தலைமையின்கீழ் 19 உறுப்பினர்களை கொண்ட புதிய செயற்குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் அபிஷேக் பானர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், யஷ்வந்த் சின்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்