மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக அந்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் முதல் மூன்று கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது.




இந்த நிலையில், 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அந்த மாநிலத்தில் தொடங்கியது. இந்த 4ம் கட்ட வாக்குப்பதிவு அந்த மாநிலத்தின் 44 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த 44 தொகுதிகளில் மொத்தம் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மட்டும் வாக்களிக்க 1.15 கோடி நபர்கள் தகுதிபெற்றவர்களாக உள்ளனர். வாக்காளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏற்கனவே மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.