மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் ருய்தாசா என்ற இடத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது ரயில் மோதியதில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 7பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பலர் படுகாயம் அடைந்ததால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சரக்கு ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவரின் உடலும் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் ரயில் பின்புறம் சரக்கு ரயில் மோதியதால் கடைசி 3 பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மேலும் பயணிகள் விரைவு ரயில் மற்ற பெட்டிகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்பதற்காக 10 பேருந்துகள் விபத்து நடந்த இடத்திற்கு புறப்பட்டுள்ளன.
மேலும், சிலிகுரி-கொல்கத்தாவிலிருந்து சிலிகுரி டென்சிங் நார்கே பேருந்து முனையத்திலிருந்து கூடுதல் பேருந்து சேவைகள் இன்று பிற்பகல் முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சன்ஜங்கா ரயில் மோதலை தொடர்ந்து சீல்டா ரயில் நிலையத்தில் அரசாங்கம் உதவி மையத்தை அமைத்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அறியலாம். 033-23508794 , 033-23833326 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. அதேசமயம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.