வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகியதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கர்ணனாக மாறிய கர்னல்:


இந்த நிலையில், வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி வரும் நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கௌரவ கர்னலாக இருக்கும் சூழலில், ராணுவ சீருடையிலே மோகன்லால் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் நல்வாழ்விற்காக ரூபாய் 3 கோடி நிதி உதவி அளிப்பதாக கூறினார்.


வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி என மொத்தம் 5 கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கி முழுவதும் சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ராணுவம், விமானப்படை என அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் கடந்த செவ்வாய்கிழமை முதல் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆதரவு கரம் தரும் பிரபலங்கள்:


நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலியாற்றில் சடலங்களாக மிதந்து வந்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.


இதையடுத்து, வயநாடு துயரத்திற்கு கேரள மக்களுக்கு உதவும் வகையில் திரை பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து வருகின்றனர். பாதிப்பு நடைபெற்ற தினத்தன்றே பிரபல நடிகை நிகிலா விமல்  நரில் சென்று நிவாரண பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிரபலங்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ஆகியோர் நிதி உதவி அளித்த நிலையில், மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன்லால் இன்று 3 கோடி நிதியை அறிவித்துள்ளார்.


மேலும் பல திரை பிரபலங்களும் வயநாடு துயரச்சம்பவத்தில் இருந்து மீண்டு வர நிதி உதவி, பொருள் உதவி அளித்து வருகின்றனர். வயநாட்டில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றே கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.