Wayanad Baily Bridge: வயநாடு மீட்பு பணிக்காக கட்டமைக்கப்பட்ட, பெய்லி எனப்படும் தற்காலிக பாலம் 190 அடி நீளம் கொண்டதாகும்.
பெய்லி பாலம் - சீதா அசோக்:
பேரிடரான நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் 330-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலை பற்றி தகவல் ஏதும் தெரியாத நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மீட்பு பணிகள் நல்ல முன்னேற்றம் கண்டதற்கு, ராணுவத்தால் கட்டமைக்கப்ப்பட்ட பெய்லி எனப்படும் தற்காலிக பாலம் முக்கிய காரணமாகும். மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான, சீதா அசோக் என்ற பெண் அதிகாரி தான் இந்த பாலத்தை கட்டமைக்கும் பணிகளை வழிநடத்தியுள்ளார். அந்த குழுவில் இடம்பெற்று இருந்த ஒரே பெண் இவர் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பணிக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
யார் இந்த சீதா அசோக்?
அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள காதில்கான் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த சீதா, விவசாயியும் வழக்கறிஞருமான அசோக் பிகாஜி ஷெல்கேவின் நான்கு மகள்களில் இரண்டாவது மகளாவார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2012ல் ராணுவத்தில் சேர்ந்தார். 10ம் வகுப்பு பயிலும் போது கண்ட ஒரு பெண் ராணுவ அதிகாரி பற்றிய கட்டுரை தான், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை சீதாவின் மனதில் விதைத்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது இவரது சிறுவயது கனவு. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், அவள் ராணுவத்தின் ஒரு அங்கமாக மாற முயன்றார். SSB தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து மூன்றாவது முறையாக தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 2015 ஆம் ஆண்டு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை எண் 1-A இல் பணிக்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தபோது, அவரது பொறியியல் பின்னணி பயனுள்ளதாக அமைந்தது. இந்நிலையில் தான், தற்போது மெட்ராஸ் இன்ஜினியர் குரூப்பில் (MEG) இடம்பெற்றுள்ள சீதா அசோக், வயநாட்டில் பெய்லி பாலத்தைக் கட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அபாரமான தலைமைப் பண்பை வெளிப்படுத்தி, தனது குழுவினரை வழிநடத்தி 31 மணி நேரத்தில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
”ஆண், பெண் பேதமில்லை”
வயநாட்டில், ஒட்டுமொத்த குழுவும் இடைவிடாமல் வேலை செய்தது. கழிப்பறைகள் கூட இல்லாத சூழலில், மோசமான சவால்களை எல்லாம் எதிர்கொண்டு, 31 மணி நேரத்தில் அந்த 190 அடி நீள பாலத்தை கட்டமை முடித்துள்ளது. கொட்டும் மழையையும் ,வெள்ளத்தையும் கருத்தில் கொள்ளாமல், பணியாற்றியதன் விளைவாகவே நிலச்சரிவில் சிக்கிய பலரின் உயிர் தற்போது காக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் நீங்கள் தானா என செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆண், பெண் என எதுவும் இல்லை. இந்த சூழ்நிலைகளை சமாளிக்க பயிற்சி பெற்ற வீரர்கள் நாங்கள். நாங்கள் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க மாட்டோம், இதை நான் எப்போதும் செய்ய விரும்பினேன்” என சீதா அசோக் தெரிவித்துள்ளார்.