Wayanad tremors:  நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


வயநாட்டில் நில அதிர்வு:


வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஏராளமானோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை:


வயநாட்டில் உள்ள மேப்பாடியில் காலை 10.15 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. வைத்திரி தாலுக்காவில் உள்ள அன்னப்பாறை, தாழத்து வயலில், பினாங்கோடு மற்றும் நென்மேனி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். பூமி அதிர்வு ஏற்பட்ட இடத்தில் இருந்து மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்டு இருப்பது கண்டத்தட்டு நகர்வதால் ஏற்படும் நில அதிர்வு அல்ல என்று தேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரி விளக்கமளித்துள்ளார்.