பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது 140 கோடி இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கியது. உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்தியர்களின் மனதை வென்ற வினேஷ் போகத்: இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். மேலும் போராட தன்னிடம் சக்தி இல்லை எனக் கூறி, ஓய்வை அறிவித்திருக்கிறார். இது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், வினேஷ் போகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹூடா கோரிக்கை விடுத்துள்ளார். 


டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அவரை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும். விரைவில் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. இல்லையேல் நான் அவரை முன்னிறுத்தியிருப்பேன். அவர் நம் அனைவரையும் பெருமைப்படுத்தி இருக்கிறார்" என்றார்.


காங்கிரஸ் போடும் திட்டம் என்ன? தொடர்ந்து பேசிய பூபிந்தர் சிங் ஹூடாவின் மகனும் மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா, "நான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ராஜ்யசபாவில் இருந்து ஒரு இடம் காலியாகி இருக்கிறது. அந்த இடத்திற்கு வினேஷ் போகட் நியமிக்கப்பட வேண்டும். அவர் தோற்கவில்லை. அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்" என்றார்.


பூபிந்தர் சிங் ஹூடா, தீபேந்தர் ஹூடாவின் கருத்தை விமர்சித்துள்ள வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் போகத், "எனது மகள், மல்யுத்த வீராங்கனை கீதா போகத், ஹரியானாவில் ஹூடாவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, ​​பல பட்டங்களை வென்ற போதிலும், ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படவில்லை.


தன்னால் முடிந்தால் வினேஷ் போகத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருப்பேன் என இன்று பூபிந்தர் ஹூடா கூறுகிறார். அவர் ஏன் கீதா போகத்தை அவரது அரசாங்கம் இருந்தபோது அனுப்பவில்லை? கீதா போகத், பல சாதனைகளை படைத்துள்ளார்.


பூபிந்தர் சிங் ஹூடா அரசு ஆட்சியில் இருந்தபோது, ​​கீதாவை துணைக் காவல் கண்காணிப்பாளராகக் கூட ஆக்கவில்லை. இப்போது காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடாவால் எப்படி இப்படி பேச முடிகிறது" என்றார்.