Manish Sisodia Bail: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின்:
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகிய இரண்டு கைது நடவடிக்கைக்கும், ஆம் ஆத்மி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தாமதமான விசாரணை மற்றும் நீண்ட சிறைவாசத்தை காரணம் காட்டி. சிசோடியா 18 மாதங்களாக சிறையில் உள்ளார்.
நீதிமன்றம் சொல்வது என்ன?
விசாரணை தாமதமானதற்கு சிசோடியாவும் தான் காரணம் என்ற விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிரான டெல்லி உயர் நீதிமன்றத்தின் பாதகமான கருத்துக்களும் உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளன. ஜாமீனை ஒரு தண்டனையாக நிராகரிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், ஜாமீன் என்பது விதி மற்றும் சிறை விதிவிலக்கு என்பதை விசாரணை நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றங்களும் உணர வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளது.
நிபந்தனை ஜாமீன்:
10 லட்சம் ஜாமீன் தொகையை பெற்று, மணீஷ் சிசோடியாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். மேலும் சாட்சிகளை சேதப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி கவாய், “சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் ஒவ்வொரு நாளும் முக்கியமானது” என்றார். இதனைதொடர்ந்து, ம்ணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை (ஆர்டர் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன்) சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைதும்..! ஜாமினும்..!
சர்ச்சைக்குள்ளான டெல்லி கலால் கொள்கை 2021-22 ஐ உருவாக்கி செயல்படுத்தியதில், மணீஷ் சிசோடியா முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்தாண்டு பிப்ரவரி 26, 2023 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் பிப்ரவரி 28, 2023 அன்று டெல்லி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர், மார்ச் 9, 2023 அன்று சிபிஐ எப்ஐஆரில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் ED அவரை கைது செய்தது.
அவர் 18 மாதங்களாக காவலில் இருப்பதாகவும், தனக்கு எதிரான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் கூறி சிசோடியா ஜாமீன் கோரியிருந்தார். அவரது ஜாமீன் மனுக்களை ED மற்றும் CBI எதிர்த்தன. ஆனால், முடிவில் உச்சநீதிமன்றம், மணிஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்கு உத்தரவிட்டது.