கர்நாடக மாநிலத்தில் உள்ளது லிங்கனமாக்கி அணை. இந்த அணையில் இருந்து கடந்த வியாழக்கிழமை முன் அறிவிப்பு ஏதுமின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வருகையை ஒட்டி முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையை ஒட்டியிருந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். கார்கல், மாரலுகோரே, அம்புகலலே ஆகிய கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. 


லிங்கனமாக்கி அணை நீர் திறக்கப்பட்டால் அது ஜாக் நீர்வீழ்ச்சியை வந்தடையும். அன்றைய தினம் ஆளுநர் ஜாக் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வந்ததாலேயே அவசர அவசரமாக லிங்கனமாக்கி அணை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
லிங்கனமாக்கி அணையின் மொத்த கொள்ளளவு 1819 அடி. ஆனால், அணையின் நீர்மட்டத்தை எட்ட 7 அடி குறைவாகவே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் ஆளுநர் வருகைக்காக அணையைத் திறந்தது மக்களை கோபமடையச் செய்துள்ளது. ஜாக் நீர்வீழ்ச்சியில் பருவமழை முடிந்துவிட்டால் தண்ணீர் பெரியளவில் இருக்காதாம். அப்படியிருக்க அணையில் தேக்கியிருந்த தண்ணீர் ஆளுநர் பார்வையிடுவதற்காக திறந்துவிட்டது தவறு என மக்கள் கூறுகின்றனர்.






ஆனால் கர்நாடகா மின் கார்ப்பரேஷன் லிமிடட் ஆன கேபிசிஎல் அதிகாரிகளோ, லிங்கனமாக்கி அணையில் தேக்கப்படும் நீர் மக்களின் குடிநீர் தேவைக்காகவோ பாசனத்துக்காகவோ திறக்கப்படுவதில்லை. அதில் தேக்கப்படும் தண்ணீர் முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்றனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆளுநர் மட்டுமல்ல அங்கு வந்த நிறைய சுற்றுலா பயணிகளும் நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு ரசித்தனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஜாக் அருவிக்கு லிங்கனமாக்கி அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இதில் ஆளுநரை தேவையில்லாமல் சர்ச்சைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




துணை ஆணையர் கே.பி.சிவக்குமார் கூறும்போது, அணையைப் பற்றி விவரம் தெரியாத அணையோர கிராம மக்கள் தான் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புகின்றனர். அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதற்கு வழக்கமான பராமரிப்புப் பணிகளே காரணம். இதனால் ஒரே ஒரு நபர் கூட பாதிக்கப்படவில்லை. மேலும் மின் உற்பத்தியும் தடைபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.


கேபிசிஎல் அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், அணையின் முகத்துவாரத்தில் குப்பைகளும் சில மரக்கட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. அதனாலேயே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஆளுநர் அங்கு வந்துவிட்டார். அவ்வளவே என்று கூறியுள்ளது.