தமிழ்நாடு:


1. அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2. திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் 8.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 55 பயனாளிகளுக்கு மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டதில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


3. நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க என்று சு. வெங்கடேசனிடம் அமைச்சர் கே.என்.நேரு மன்னிப்பு கேட்டுள்ளார்.


4. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாததை தொடர்ந்து ஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார்.


இந்தியா:


1. வாரணாசி அச்சி கட் பகுதியில் தேருவோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சுவாதி என்ற பெண், சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் என்னுடைய பேரு சுவாதி..நான் தென் இந்தியாவுல இருந்து வர்றேன். நாம் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில பட்டப்படிப்பு முடிச்சுருக்கன்.பிரசவத்தின் போது என்னோட உடலின் வலது பக்கம் செயலிழந்து போச்சு.. கடந்த 3 வருஷத்துக்கு முன்னாடி  வாரணாசிக்கு வந்தேன். இங்க இருந்துதான் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன் என்று தெரிவித்துள்ளார். 


2. புதுச்சேரி பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர் வெங்கடசுப்ரமணியன் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் கையால் விருது பெற தேர்வாகியுள்ளார். முதல்முறை பால சக்தி புரஸ்கார் விருது பெற்ற இவர் இம்முறை இந்திய அரசின் சமூகநீதி அதிகாரம் அளித்தல் துறை மூலம் இந்த ஆண்டின் சிறந்த ஆற்றல் உள்ள நுண்ணறிவு மிக்கவர் என்ற தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


3. எங்களது ஆட்சிக்கும், ரங்கசாமி ஆட்சிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு தொல்லை கொடுத்தார்களோ, அதேபோல் மத்திய அரசு ரங்கசாமிக்கும் தொல்லை கொடுக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.


குற்றம்:


1.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் தனது 17 வயது மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். 40 வயது பெண் தனது 52 வயது கள்ளக்காதலனுக்கு உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


2. மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தனது 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.


3. புதுச்சேரி ஜவுளிக்கடையில் துணிகளை வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. 


சினிமா:


1. மாநாடு படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் கவனம் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யாவை நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று என்னுடைய நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் என் தசாப்தத்தை உருவாக்கினீர்கள். உங்களுடைய பாராட்டு இந்த பயணத்தை எதிர்கொள்வதற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.


விளையாட்டு:


1. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. 


2. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய போட்டியில் இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அக்சர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அதவாது அக்சர் விளையாடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில், 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண