மலை கிராமங்களில் , காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கும். யானை மனிதர்களை தங்கள் இனத்தின் அச்சுறுத்தலாக நினைத்து தாக்குவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் யானை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் வந்து ஆக்ரோஷமாக பைக்கை தட்டிவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள செருபுழா என்னும் கிராமத்தில் வீடுகள் நிறைந்த பகுதிக்குள் யானை ஒன்று வழி மறந்து வந்துவிட்டது. இதனை அறியாத அப்பகுதி மக்கள் இயல்பாக தங்களின் வேலையை பார்த்துக்கொண்டிருக்க , மிரண்டு ஓடு வந்த யானையை பார்த்ததும் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் விறுட்டென வீட்டிற்குள் பாய்ந்துவிட்டனர். மனிதர்களை கண்டதும் ஆக்ரோஷமாக வந்த யானை , அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை தனது தந்தத்தால் மோதி கீழே தள்ளிவிட்டு , அதே வேகத்தில் கடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதனை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடவே இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு , அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் வழி தவறி வந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். தற்போது யானை வள்ளிக்கெட்டு பகுதியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. செருப்புழா மற்றும் வள்ளிகெட்டு பகுதிகள் கருளை ஊராட்சியில் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. யானைகளின் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், உரிய தீர்வு கிடைக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னதாக தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றுகொண்டிருந்த சஜி என்பவரை யானை துரத்திய சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. யானையை அந்த நபர் தொந்தரவு செய்யாத போதிலும் , யானை அந்த நபரை தங்களுக்க் அச்சுறுத்தலாக எண்ணி திடீரென்று காட்டு யானைக் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்துள்ளதைக் கண்ட சஜி என்பவர் வேறு வழியின்றி மரத்தில் ஏறியுள்ளார். ஏனெனில் இடுக்கியின் மலைப்பகுதிகளில் ஒளிவதற்கு வேறு இடம் கிடையாது எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் பிறகு யானைகள் நகரவே அவர் அங்கிருந்து தப்பியிருக்கிறார்.