வீட்டுப்பணிப்பெண்:
நொய்டாவில் உளள கர்ஹி சௌகந்தி கிராமத்தில் வசிப்பவர் அனிதா (20). கிளியோ கவுண்டி என்ற பகுதியில் வசிப்பவர் ஷெபாலி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக அனிதா என்ற பெண் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அனிதாவின் ஆறு மாத கால ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனால் அனிதா வீட்டின் உரிமையாளரான ஷெபாலியிடம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது தான் வேலையை விட்டு நின்று கொள்வதாக கூறினார். அதற்கு ஷெபாலி வெறொரு நபர் வரும் வரை ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் அனிதாவும் ஒரு சில நாட்கள் வேலை செய்து வந்தார். இதனை அடுத்து சில நாட்கள் கழித்து அனிதா மீண்டும் தான் வேலையை விட்டு நின்று கொள்வதாக முறையிட்டார்.
சித்ரவதை:
இதற்கு ஷெபாலி மறுப்பு தெரிவித்து, அனிதாவை கடுமையாக தாக்கியதாக கூறப்பபடுகிறது. இதனால் அனிதாவை தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து, அனைத்து வேலையும் செய்யும்படி வற்புறுத்தியுதாக தெரிகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அனிதா வீட்டைவிட்டு தப்பி செல்ல முடிவு செய்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நான்காவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் தப்பி செல்ல முயற்சி செய்தார்.
அப்போது அவரது வீட்டின் உரிமையாளரான ஷெபாலியிடம் சிக்கி கொண்டார். அப்போது ஷெபாலி தனது வீட்டிற்கு வருமாறு அந்த பெண்ணை கடுமையாக தாக்கி லிப்ட்டில் இருந்து இழுத்து சென்றார். இந்த வீடியோவானது இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதை அடுத்து, அனிதா நேற்று நான்காவது மாடியில் இருந்து கயிறு மூலம் தப்பி செல்ல முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உரிமையாளர் மீது புகார்:
இதனை அறிந்த அனிதாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, வீட்டு உரிமையாளரான ஷெபாலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கௌதமபுத்தா நகர் காவல்துறை கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி ஷெபாலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக" தெரிவித்தனர்.