உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிரக்யராஜ். இங்கு பிஷப் ஜான்சன் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை தேர்வு மையமாக வைத்து கடந்த பிப்ரவரி 11ம் தேதி உத்தரபிரதேச மாநில அரசு நடத்திய ஆர்.ஓ. உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்கும் முன்னரே வினாத்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வினாத்தாள் கசிவு விவகாரம்:
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில சிறப்பு போலீஸ் பிரிவு விசாரணை நடத்தியதில் அந்த தேர்வு மையமாக செயல்பட்ட அந்த பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த வினீத் யஸ்வந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அந்த பள்ளியின் முதல்வராக பதவி வகித்த பரூல் சாலமன் என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், பள்ளி முதல்வர் பரூல் சாலமனுக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், பள்ளி நிர்வாகம் சார்பில் பிஷப் டான் பள்ளியின் முதல்வராக பரூல் சாலமன் பதவி வகித்தபோது ரூபாய் 2.40 கோடி வரை அவர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவருக்கு பதில் புதிதாக ஒருவரை பள்ளியின் முதல்வராக நியமித்துள்ளனர்.
தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி முதல்வர்:
இந்த சூழலில், பள்ளியின் புதிய முதல்வர் பதவியேற்க நேற்று வந்த சூழலில் பரூல் சாலமன் தான் பள்ளி முதல்வர் பதவியை விட்டுத்தர மாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பள்ளி முதல்வர் நாற்காலியில் இருந்து எழுந்து செல்ல மறுப்பு தெரிவித்தார். அவருடன் பள்ளியின் சேர்மன், மற்ற ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தனது செல்போனில் பரூல் சாலமன் படம் பிடித்தார். அப்போது, அவரது செல்போனை வழக்கறிஞர் ஒருவரும், பள்ளி நிர்வாகத்தினர் சிலரும் பறிக்க முயற்சித்தனர்.
பின்னர், அவரை அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன் அவரை தரதரவென இழுத்துச் அந்த அறையின் வாசல் வரை இழுத்துச் சென்றனர். பின்னர், பரூல் சாலமன் அந்த நாற்காலியில் இருந்து எழுந்தார். இதையடுத்து, அந்த நாற்காலியில் புதியதாக நியமித்துள்ள பள்ளி முதல்வரை அந்த பள்ளியின் சேர்மன் அமரச் சொன்னார்.
கோடிக்கணக்கில் முறைகேடு:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரான பரூல் சாலமன் என்.எல்.டான், பிஷப் மௌரிஸ் எட்கர் டான், வினிதா இசுபியஸ், சஞ்சீத் லால், விஷால் நவேல் சிங், ஆர்.கே.சிங், அருண் மோஜ்ஸ், தருண் வியாஸ், அபிஷேக் வியாஸ் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பிஷப் டான் பரூல் சாலமன் பள்ளி முதல்வராக இருந்தபோது ரூபாய் 2.40 கோடி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளியிலே பள்ளியின் முதல்வரை பள்ளி நிர்வாகமும், சக ஆசிரிய, ஆசிரியைகளும் இணைந்து அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோதே தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.